Enable Javscript for better performance
கல்வியில் சிறக்க உடல் நலன் அவசியம்- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமானால் உடல் நலனைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றார் அரியலூர் சார் ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி.

    அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளரிளம் பருவத்தினருக்கான வாராந்திர இரும்புச்சத்து மற்றும் போலிக் ஆசிட் மாத்திரை வழங்கும் திட்டத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:

    தமிழ்நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு போதிய சத்து இல்லாமல் இருப்பதால் அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. இதைப் போக்கி மாணவ, மாணவிகளின் உடல் நலனைப் பாதுகாத்திட முதல்வர் இரும்புச் சத்து மாத்திரை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    இந்தியாவில் 10 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகளில் 43 சதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உணவில் இரும்புச் சத்து குறைபாடு மற்றும் குடற்புழு நீக்கம் செய்யப்படாமல் இருப்பதே காரணமாகும்.

    இந்தியாவில் மட்டுமல்ல வளர்ச்சி அடைந்த நாடாகக் கருதப்படும் அமெரிக்காவிலும்கூட சத்துக் குறைபாடு உள்ளது. அங்குள்ளவர்களில் 30 சதம் பேர் அனீமீயாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 12 லட்சம் பள்ளிக் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    எனவே பணக்கார நாடு, ஏழை நாடு என்ற பாகுபாடில்லாமல் அனீமீயா பாதிப்பு எல்லா நாடுகளிலும் உள்ளது. இதைப் போக்க நல்ல சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தின்படி வாரம் ஒரு முறை மாணவ, மாணவிகள் தவறாமல் மாத்திரையை உட்கொள்ள வேண்டும். காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு உங்கள் உடல்நிலையை நன்றாகப் பேணிப் பாதுகாத்தால்தான் கல்வியில் சிறக்க முடியும் என்றார் அவர்.

    நிகழ்ச்சியில் 100 மாணவ, மாணவிகளுக்கு மாத்திரை வழங்கி திட்டத்தை சார் ஆட்சியர் தொடக்கி வைத்தார். மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் ஆ. மோகன் திட்ட விளக்கவுரையாற்றினார். துரை. மணிவேல் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.

    நகராட்சித் துணைத் தலைவர் மலர்க்கொடி, முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்டக் கல்வி அலுவலர் சுப்புராஜ், நகராட்சி உறுப்பினர்கள் சிவஞானம், கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கடுகூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆர். கஸ்தூரிபாய் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai