Enable Javscript for better performance
ஏரி, குளங்களை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஏரி, குளங்களை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

    By அரியலூர்,  |   Published on : 21st June 2014 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மழைக்காலம் தொடங்குவதற்குள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை போர்க்கால அடிப்படையில் தூர் வார வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

    அரியலூர் மாவட்ட வேளாண்மைத் துறையின் சார்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரியலூர் ஆட்சியர் அலுவலகக் கூட்ட மன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியது:

    ஜெயச்சந்திரன் (விளந்தை உழவர் மன்றத் தலைவர்): அரியலூர் மாவட்டத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு கணினியில் சிட்டா வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

    கங்கைகொண்டசோழபுரம் கோயிலை கட்டிய ராஜேந்திர சோழனின் 1000 -வது பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாட ஆட்சியர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    உலகநாதன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்): தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்டத் தலைநகர்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அரியலூர் அரசு மருத்துவமனை மட்டும் தரம் உயர்த்தப்படவில்லை.

    அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக வேளாண்மைத் துறையிலிருந்து அனுப்பப்பட்ட 1 லட்சம் அகத்தி மரக்கன்றுகள் வழங்கப்படாமலேயே கருகி, காய்ந்து விட்டது.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரும் நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும்.

    பூ. விசுவநாதன் (தமிழ்நாடு ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர்): குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்காக அரசு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கமாக தெரிவிக்க வேண்டும்.

    அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா. பழூர் விவசாயிகளுக்கு மின்சாரத்தில் முன்னுரிமை வழங்கி மும்முனை மின்சாரம் பகலில் 10 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் தடையின்றி வழங்க வேண்டும்.

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 10 ஏரிகளை தூர்வார அரசிடமிருந்து நிதி பெற வேண்டும்.

    செங்கமுத்து (அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்): ஏரி மற்றும் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஷட்டர்களை சரி செய்ய வேண்டும்.

    பிச்சைபிள்ளை (அகில இந்திய விவசாயிகள் சங்கம்): அரியலூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏரிகள் உள்ளன. அதனை தூர்வார வேண்டும். குருவாடி போன்ற இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். மாட்டு வண்டி மூலம் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும். அரியலூர் அரசு மருத்துவமனையில் "அம்மா' உணவகம் அமைக்க வேண்டும்.

    பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசும்போது, தமிழக அரசு 2014 -ம் ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை பெருக்க குறுவை தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அ ரியலூர் மாவட்டத்தில் திருமானூர் வட்டாரத்தில் 26 கிராமங்களிலும், தா. பழூர் வட்டாரத்தில் 12 கிராமங்களிலும் மற்றும் ஜயங்கொண்டம் வட்டாரத்தில் 3 கிராமங்களிலும் என 3 வட்டாரங்களில் 41 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டம் 2500 ஏக்கரில் ரூ. 1.02 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. திருந்திய நெல், சமுதாய நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25,000 வீதம் 20 ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிங் சல்பேட் ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ வீதம் 2500 ஏக்கருக்கு ரூ. 8.75 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது.

    நெல் நுண் சத்து ஏக்கர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் 2500 ஏக்கருக்கு ரூ. 3.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், களர் மற்றும் களிமண் பாங்கான நிலத்தில் ஜிப்சம் இட ரூ. 17.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல, உயிர் உரங்கள், நெல் நடவு இயந்திரம், களை எடுக்கும் கருவி என ஒவ்வொன்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறுவை தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பட்டியல் அந்தந்தப் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தயார் செய்யப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை பெருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஸ்தபா கமால்பாட்சா, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சடையப்ப விநாயக மூர்த்தி, துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெயச்சந்திரன், இணை இயக்குநர் (வேளாண்மை) குணசேகரன், துணை இயக்குநர்(தோட்டக் கலைத் துறை) சுப்பையா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai