Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலக உதவியாளர் தீக்குளிக்க முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலக உதவியாளர் தீக்குளிக்க முயற்சி

    By ஜயங்கொண்டம்  |   Published on : 21st June 2014 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சியில் பணிபுரியும் தமக்கு விடுமுறை வழங்க மறுத்ததாகக் கூறி, வெள்ளிக்கிழமை அலுவலக உதவியாளர் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிபவர் வீ. சரஸ்வதி (41). இவர் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் அறைக்குள் சென்று திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அருகில் இருந்த பணியாளர்கள் சரஸ்வதி மீது தண்ணீரை ஊற்றி, வெளியில் அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்து சரஸ்வதி கூறியது:

    நான் ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக பணி செய்து வருகிறேன். கடந்த மே 30-ம் தேதி எனது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காகவும், தாயை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்காகவும் ஜூன் 2 முதல் 19-ம் தேதி வரை ஈட்டிய விடுப்பு கேட்டு, ஆணையரிடம் கடிதம் கொடுத்தேன். அவர் கடிதத்தை மேலாளரிடம் கொடுக்குமாறு கூறினார். பின்னர் ஜூன் 3-ம் தேதி ஆணையரை சந்தித்தபோது, உனக்கு விடுப்பு வழங்க முடியாது. உன்னை பணிநீக்கம் செய்கிறேன் எனக் கூறினார்.

    பின்னர், ஜூன் 11-ம் தேதி எனது வீட்டின் சுவரில் என்னை பணி நீக்கம் செய்ததாக குறிப்பாணை ஒட்டப்பட்டிருந்தது. அதற்கு நான் பதிவு தபாலில் பதில் அனுப்பினேன். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 20) காலை பணியில் சேர்வதற்காக நான் அலுவலகத்துக்கு வந்தபோது, ஆணையர் என்னை பணியில் சேர அனுமதிக்கவில்லை என்றார் சரஸ்வதி.

    இதுகுறித்து ஆணையர் வே. நவேந்திரனிடம் கேட்ட போது, அலுவலகப் பணியாளர் கடந்த 2-ம் தேதி அன்று 18 நாள்கள் விடுமுறை வழங்குமாறு கேட்டார். நான் நிர்வாக நலன் கருதி 18 நாள்கள் விடுமுறை வழங்க முடியாது. இதுகுறித்து மேலாளருடன் கலந்துபேசி முடிவெடுப்பதாகக் கூறினேன்.

    ஜூன் 3-ம் தேதி மீண்டும் அலுவலகத்துக்கு வந்த அவர், என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டிச் சென்றார். இதையடுத்து அவரை பணிநீக்கம் செய்து பதிவு தபாலில் உத்தரவு அனுப்பினேன். அவர் அதை வாங்காமல் திருப்பி அனுப்பியதால், அவரது வீட்டின் சுவரில் பணிநீக்க ஆணையை ஒட்ட உத்தரவிட்டேன். வெள்ளிக்கிழமை காலை பணியில் சேர அவர் அலுவலகத்துக்கு வந்தபோது, உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளதால் பணியில் சேர முடியாது என்று கூறினேன். மேலும், அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால், அவர் மீது நிர்வாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai