Enable Javscript for better performance
அரியலூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 27 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 27 பேர் கைது

    By அரியலூர்,  |   Published on : 26th June 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து, அரியலூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 27 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    மத்திய அரசு அறிவித்துள்ள பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து.

    இதையொட்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து, ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரியலூர் மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையில், புதன்கிழமை ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

    அவர்களை காவல் துறையினர் தேரடி பேருந்து நிறுத்தம் அருகே தடுத்து நிறுத்தினர். இதனால், ஊர்வலத்தில் வந்தவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினசாமி, உதவி ஆய்வாளர் ராஜவேல் உள்ளிட்ட போலீஸார் மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜோதிபாசு, அகில இந்திய மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கலையரசி, மாவட்டப் பொருளாளர் பாக்கியம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிற்றம்பலம் உள்ளிட்ட 27 பேரை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai