Enable Javscript for better performance
அரியலூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

  

  அரியலூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

  By அரியலூர்,  |   Published on : 28th June 2014 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் நகரில் குடிநீர், பொதுசுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

  அரியலூர் நகராட்சியின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

  கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாதம்:

  சிவஞானம் (அதிமுக): அரியலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் 2 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் "அம்மா' உணவகம் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

  மேலும், நகராட்சியின் 18 வார்டுகளிலும், 20 இடங்களில் ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கிட ரூ. 80 லட்சம் வழங்கிய முதல்வருக்கு நன்றி.

  எனது வார்டு பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் பிரச்னை நிலவுகிறது.

  ராஜேந்திரன் (திமுக): கூட்டப் பொருள்கள் அனைத்தும் நிறைவேற்றலாம் அதற்கு ஆட்சேபணை இல்லை.

  சிவஞானம் (அதிமுக): அதற்கு அனுமதிக்க முடியாது, கூட்டப் பொருள்களில் விவாதிக்கப்பட வேண்டி உள்ளது. செட்டி ஏரியில் மீன் குத்தகை விடப்பட்டுள்ளதா அங்கு மீன் பிடிக்க யாருக்கு ஏலம் விட்டுள்ளீர்கள்.

  ராஜேந்திரன் (திமுக): அரியலூரில் தரைக்கடைகளில் ஒருவர் வசூல் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு யார் அனுமதி கொடுத்தது. அதற்கு ஏலம் விட்டுள்ளீர்களா.

  மாலா தமிழரசன் (திமுக): எனது வார்டில் 2 கைப்பம்புகளும் பழுதாகி உள்ளது. அதனை சரி செய்து தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நான் உண்ணாவிரதம் இருப்பேன்.

  கருணாநிதி (அதிமுக): நகராட்சியில் பிறப்புச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்க 6 மாத காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

  முருகேசன் (தலைவர்): அந்தப் பிரிவில் புதிய அலுவலர்கள் வந்துள்ளதால் தாமதமாகிறது.

  சிவஞானம் (அதிமுக): பள்ளியில் குழந்தையை சேர்க்க பிறப்புச் சான்றிதழ் தேவைப்படுகிறது. நகராட்சியில் சான்றிதழ் வழங்குவதற்குள் பள்ளிப்படிப்பையே அந்தக் குழந்தை முடித்து விடும். பொதுமக்களின் அத்தியாவசியப் பணியான பொது சுகாதாரம், மின்விளக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை வேண்டுமென்றே நகராட்சி தாமதப்படுத்தி வருகிறது. இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி வருகிறீர்கள். 11-வது வார்டில் பல மாதங்களாக கழிவறையில் தண்ணீர் வசதி இல்லை. மாரியம்மன் கோயில் அருகில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் உடைந்து பல மாதங்களாகிறது. அதனை சரி செய்ய வேண்டும்.

  கோகுல் (பாமக): நகராட்சிக்கு எத்தனை முறை பிளீச்சிங் பவுடர் போன்ற பொருள்கள் வாங்குவீர்கள்.

  தலைவர் : பொது சுகாதாரத்தை பராமரிக்கும் வகையில் பிளீச்சிங் பவுடர் போன்ற பொருள்கள் வாங்கி நீண்ட நாட்களாகி விட்டது. தேவைக்காகத்தான் வாங்கப்படுகிறது.

  ராஜேந்திரன் (திமுக): 5-வது வார்டில் நகராட்சி சட்டத்தை மீறி 32 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதற்கு நகராட்சியின் அனுமதி பெறப்பட்டுள்ளதா.

  தலைவர்: செட்டி ஏரி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வருகிற 30-ம் தேதி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதன்பிறகு, அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். அரியலூர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

  நகரில் மேற்கொள்ளப்பட்ட புதைச் சாக்கடைத் திட்டத்தால் சேதமடைந்த கீழத்தெரு, சிங்காரத்தெரு, மேல அக்ரஹாரம் தெரு ஆகிய தெருக்களில் ரூ. 26 லட்சத்தில் புதிதாக தார்ச்சாலை அமைப்பது.

  அரியலூர் நகராட்சிப் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள மின்மோட்டார்கள், பிரதான குழாய்களில் ஏற்படும் உடைப்பை சரி செய்வதற்காக ரூ. 8 லட்சத்து 37 ஆயிரம் அனுமதிப்பது. நகராட்சிக்கு ரூ. 75 ஆயிரம் மதிப்பில் மேசை, நாற்காலிகள் வாங்குவது உள்ளிட்ட 56 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளர் ரவிச்சந்திரன், எழுத்தர் பாலச்சந்திரன், துணைத் தலைவர் மலர்க்கொடி மனோகரன், உறுப்பினர்கள் அமுதலட்சுமி, ஜெயலட்சுமி, ஆனந்தி, அபிராமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai