Enable Javscript for better performance
குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தா. பழூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அரியலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் குணசேகரன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார்.

    நடப்புப் குறுவைப் பருவத்தில் நெல் சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்தி உற்பத்தித் திறனைப் பெருக்க குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

    இத்திட்டம் அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக திருந்திய நெல் சாகுபடிக்கான மேட்டுப்பாத்தி நாற்றங்காலும், நடவு இயந்திரம் மூலம் நடுவதற்கு தட்டு நாற்றங்காலும் அமைக்கப்படுகிறது.

    தா.பழூர் வட்டாரத்தில் ஏற்கெனவே குறுவை நாற்றங்கால் அமைத்து திருந்திய நெல் சாகுபடி 90 ஏக்கரில் நடப்பட்டுள்ளது. தற்போது சுமார் 57 ஏக்கரில் நடுவதற்குரிய நாற்றங்கால் விடப்பட்டுள்ளது. மேலும் நடவு இயந்திரம் மூலம் நடுவதற்கு பாய் நாற்றங்கால் சோழமாதேவி, இடங்கண்ணி, திருபுரந்தான் தெற்கு, முட்டுவாஞ்சேரி, மற்றும் காரைக்குறிச்சி உள்ளிட்ட 10 கிராமங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் குணசேகரன் ஆய்வு செய்தார். திருபுரந்தான் கிராமத்தில் வடிவேல் என்ற விவசாயி பாய் நாற்றங்கால் விட்டு அதன் மூலம் திருந்திய நெல் சாகுபடி 7 ஏக்கரில் நடவு செய்யப்படுவதை இணை இயக்குநர் பார்வையிட்டார்.

    மேலும் தா.பழூர் வட்டாரத்தில் டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை கொண்டு 4 குழுக்கள் அமைக்கவும் அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது வேளாண் உதவி இயக்குநர் முரளிதரன், தா.பழூர் வேளாண் உதவி இயக்குநர் ஆர். பழனிச்சாமி, வேளாண் உதவி அலுவலர்கள் ஜோதி, ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai