சுடச்சுட

    

    அரியலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ், ஜயங்கொண்டம் வட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெண் சிவகாமிக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்கினார்.

    மேலும், புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில், ஊராட்சி அளவிலான 25 குழுக் கூட்டமைப்புகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 25 லட்சம் ஊக்கத் தொகைக்கான காசோலை, கோவிந்தபுத்தூர், சிந்தாமணி ஆகிய ஊராட்சிகளில் உள்ள வறுமை ஒழிப்புச் சங்கங்களின் மூலம் மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோருக்கான தனிநபர் கடனாக ரூ. 2,92,500-க்கான காசோலை, மகளிர் திட்டத்தின் சார்பில், 46 இளைஞர்களுக்கு ரூ. 2,41,500 மதிப்பிலான ஓட்டுநர் உரிமங்கள் என மொத்தம் ரூ. 30.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

    கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற ஆட்சியர், மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முஸ்தபா கமால்பாட்ஷா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் சாமுவேல் இன்பதுரை, புதுவாழ்வுத் திட்ட மேலாளர் சுந்தரேஸ்வரன், உதவித் திட்ட அலுவலர் ஜெ. மரியம்தேலம்மாள், தனித் துணை ஆட்சியர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai