சுடச்சுட

    

    அரியலூரில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் புதன்கிழமை தொடக்கிவைத்துப் பார்வையிட்டார்.

    அரியலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியை தொடக்கிவைத்து ஆட்சியர் பேசியது:

    அரியலூர் வருவாய் மாவட்ட அளவில் தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனமும், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள காட்சிப் பொருள்களின் முக்கிய தலைப்புகள் அறிவியல் மற்றும் கணிதத்தின் முக்கியத்துவங்கள், பசுமையாற்றல், உடல் நலமும் சுகாதாரமும், இயற்கை வளங்களை பாதுகாத்தல், மறுசுழற்சி, அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கையும் கண்டுபிடிப்புகளும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு, கல்வி மேலாண்மை, ஆற்றல் வளங்களை பாதுகாத்தல் போன்ற தலைப்புகளில் பல்வேறு விதமான காட்சிப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், கண்காட்சியில் கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரித்தல், இயற்கை உணவு முறைகள், இயற்கை உரங்களின் முக்கியத்துவம், தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து சாதனங்கள், நிலநடுக்கம் மற்றும் எரிவாயு கசிவு எச்சரிப்பான் கருவி, மழைநீர் மற்றும் மின்சாரத்தை சேமிக்கும் முறைகள் போன்ற தலைப்புகளின் கீழ் மாணவர்கள் வைத்திருந்த கண்காட்சி அரங்குகள் மிகவும் பாராட்டத்தக்கது. வருவாய் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று பள்ளிகள் டிசம்பாó மாதம் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் என்றார் ஆட்சியர்.

    கண்காட்சியை சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி, அரசு சிமென்ட் ஆலை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அரியலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர் மாதிரி மேல்நிலைப் பள்ளி, அரியலூர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, புனிதமேரி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

    நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா. மாரிமுத்து, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ந. அருணாசலம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுகுமாரன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பெ. பவுன் (அரியலூர்), என். கணேசன் (உடையார்பாளையம்), முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேசன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai