சுடச்சுட

  

  ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: அரியலூரில் கடையடைப்பு

  By அரியலூர்  |   Published on : 13th November 2014 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து அரியலூரில் புதன்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஊர்வலம் சென்ற 150 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  அரியலூர் நகரில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் நீர் ஆதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, அரியலூர் - ஜயங்கொண்டம் சாலையில் உள்ள வாரியில் 50 ஆண்டுகளாக இருந்த 5 வீடுகள், செந்துறை சாலையில் இருசுக்குட்டைக் கரையில் இருந்த 25 வீடுகள் முழுவதும் அகற்றப்பட்டன.

  இந்த நிலையில், அரியலூர் நகரின் மேல்பகுதியில் உள்ள குறிஞ்சான்குளம் மற்றும் அரசு நிலையிட்டான் ஏரிக்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை புதன்கிழமை அகற்றப் போவதாக வருவாய்த் துறையினர் 187 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர். மேலும், தண்டோரா மூலம் அந்தப் பகுதியில் அறிவிக்கப்பட்டது.

  150 பேர் மீது வழக்கு: இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேலத்தெரு பகுதி மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும், செவ்வாய்க்கிழமை மாலை பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையிலிருந்து தேரடி வரை ஊர்வலமாகச் சென்றனர். இந்த ஊர்வலத்துக்கு அவர்கள் காவல் துறையின் அனுமதி பெறவில்லை. இதைத் தொடர்ந்து, வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட 150 பேர் மீது தடையை மீறி ஊர்வலம் சென்றதாக அரியலூர் நகரக் காவல் துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

  இந்த நிலையில், புதன்கிழமை ஆக்கிரமிப்பு அகற்ற பாதுகாப்பு தரமுடியாது, எனவே, அதை ஒத்திவைக்குமாறு காவல் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தப் பணிகள் வியாழக்கிழமை (நவ. 13) நடைபெறும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

  கடையடைப்பு: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து, அரியலூர் அனைத்து வியாபாரிகளும் புதன்கிழமை தங்கள் கடைகளை அடைத்தனர். அரியலூர் மார்க்கெட் தெரு, சின்னக்கடைத்தெரு, எம்.பி.கோவில்தெரு, பேருந்து நிலையம், பெரியகடைத்தெரு, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த மளிகைக் கடைகள், நகைக்கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

  இதனால், வெளியூரில் இருந்தும், சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் அரியலூருக்கு வந்த பயணிகள் சிரமத்துக்குள்ளாயினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai