சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 689 பெண்களுக்கு ரூ. 1 கோடியே 28 லட்சத்து 35 ஆயிரத்து 800 வழங்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வியாழக்கிழமை கூறியது:

  பெண்களை உயர்த்தவும், பெண்சிசுக்கொலையைத் தடுக்கவும், பெண்கல்வி, வேலைவாய்ப்பு, அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் இவைகளை அளிக்கவும் தமிழக அரசால் 1992-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டம் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டமாகும்.

  இத்திட்டத்தின் கீழ் 18.11.2011-க்குப் பிறகு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்து, ஆண் குழந்தை ஏதும் இல்லாதிருந்தால், அப்பெண் குழந்தையின் பெயரில் ஆரம்ப வைப்பீடாக ரூ. 50 ஆயிரமும், குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்து ஆண் குழந்தை இல்லாதிருந்தால், ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா ரூ. 25 ஆயிரமும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது.

  இந்த வைப்புத் தொகை ஒவ்வொரு 5 ஆண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் திரளான நிலை வட்டி விகிதத்துடன் கூடிய நிலை வைப்புத்தொகையின் முதிர்வுத் தொகை இரு திட்டங்களின் கீழ் முறையே 3 லட்சத்து 232 ரூபாயும், மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 117 ரூபாயும் ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்படுகிறது.

  மேலும் இந்தத் திட்டங்களின் கீழ் தொகை வைப்பீடு செய்யப்பட்ட ஆறாவது ஆண்டிலிருந்து கல்விச் செலவுக்காக ஆண்டுதோறும் ஊக்கத்தொகை ரூ. 1800 வரை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெண் கல்வி முன்னேற்றம் அடைந்துள்ளதற்கும், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் குறைந்துள்ளதற்கும், பெண் குழந்தை பாலின விகிதம் அதிகரித்துள்ளதற்கும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் முக்கிய காரணியாக உள்ளது.

  இத்திட்டத்தில் பயன்பெற பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் நடுத்தர, ஏழை மக்களுக்கு பெரிதும் பயன் உள்ளதாக இருக்கிறது.

  அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் 689 பெண் குழந்தைகளுக்கு ரூ. 1.28 கோடி மதிப்பில் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சாதாரண மக்களும் பயன்பெற வேண்டுமென என்ற நோக்கத்தில் இத்திட்டத்துக்கான ஆண்டு வருமான வரம்பு 14.10.2014 முதல் ரூ. 24 ஆயிரத்திலிருந்து ரூ. 72 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

  இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்ற ஜயங்கொண்டத்தைச் சேர்ந்த ராபியதூள் கூறுகையில், என் கணவர் கூலி வேலை செய்துவருகிறார். எனது 2 பெண் குழந்தைகளுக்கும் நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai