சுடச்சுட

  

  கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியலூரில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

  கர்நாடக அரசு தமிழகத்தின் எல்லையில் உள்ள மேகதாட்டு என்ற இடத்தில் அணைகளை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கு, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

  மேலும், இந்த அணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  இந்நிலையில், அரியலூர் வழக்குரைஞர்கள் இந்த விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

  இதுகுறித்து அரியலூர் வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் முத்துக்குமரன் செய்தியாளர்களிடம் கூறியது:

  தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் கர்நாடக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். எவ்வித சட்ட அங்கீகாரமும் இல்லாமல் தன்னிச்சையாக கர்நாடக அரசு செயல்படுகிறது. இதனை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக, அரியலூர் வழக்குரைஞர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தை புறக்கணித்துள்ளோம்.

  மேலும், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து வழக்குரைஞர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார்.

  வழக்குரைஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பால் நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai