சுடச்சுட

  

  அரியலூர் நகரில் சாலையைச் சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  அரியலூர் நகராட்சிப் பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

  அரியலூர் 10-வது வார்டு பகுதியில் உள்ள கல்லக்குடி தெரு உள்ளிட்ட சாலைகள் அனைத்தும் புதைச் சாக்கடைத் திட்டப் பணிக்காக தோண்டப்பட்டதால் குண்டும், குழியுமாக உள்ளன. மேலும் தற்போது பெய்துவரும் மழையால் சாலைகளில் சேறும், சகதியுமாக பொதுமக்கள் நடந்து செல்லமுடியாத நிலையில் உள்ளது.

  மேலும் பொதுமக்கள், சாலையில் பொதுக்குழாயில் வரும் குடிநீரை பிடிக்க முடியாதபடி உள்ளது. இந்தக் குறைகளைச் சரிசெய்து சாலையைச் சீரமைக்க வேண்டும். பொதுக் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி 10-வது வார்டு பொதுமக்கள் அரியலூர் - திருச்சி சாலையில் சனிக்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அரியலூர் வட்டாட்சியர் வைத்தியநாதன், நகராட்சி பொறியாளர் ரவீந்திரன் மற்றும் நகரக் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பொதுமக்களுடன் பேச்சு நடத்தி, கோரிக்கை குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

  இந்த மறியலால் திருச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai