சுடச்சுட

  

  புறவழிச்சாலை- ரயில் நிலைய இணைப்புச் சாலை அமைக்க வலியுறுத்தல்

  By அரியலூர்,  |   Published on : 18th November 2014 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, புறவழிச்சாலையை ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் இணைப்புச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  அரியலூரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக நெடுஞ்சாலைத் துறை மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு 7 கி.மீ தொலைவிற்கு புறவழிச்சாலை புதிதாக அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது.

  புறவழிச்சாலை அமைக்கப்படும்போது, அரியலூர் மாவட்டம், அரியலூர் வடக்கு வருவாய் கிராமமான எருத்துக்காரன்பட்டி ஊராட்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டம், அல்லிநகரம் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அரியலூர் ரயில் நிலையத்துக்கும் வடக்கே 500 மீட்டர் தூரத்தில் ரயில்வே பாதையை கடக்கும் வகையில் (சஏ136) நெடுஞ்சாலைக்கு சொந்தமான புறவழிச்சாலையில் உயர்நிலை ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது.

  இந்த புறவழிச்சாலையுடன் ஜயங்கொண்டம் சாலை, செந்துறை சாலை, பெரம்பலூர் சாலை, தஞ்சை சாலை, திருச்சி சாலை, பொய்யூர் சாலை ஆகிய வெளியூர் சாலைகளும், அரியலூர் நகரில் இருந்து வெளியே செல்லும் செந்துறை சாலை, கல்லங்குறிச்சி சாலை என பல சாலைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

  தற்போது அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு விடுதி, அரசு தொழில் பயிற்சி நிலையம் ஆகியவை இந்த சாலையில் அமைந்துள்ளன.

  மேலும், அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் இந்த புறவழிச்சாலையை ஒட்டியே அமைக்கப்பட உள்ளது.

  ரயில் நிலையமும், புறவழிச்சாலையும் 500 மீட்டர் தூரத்தில் இருந்தபோதிலும், இவை இணைக்கப்படவில்லை. இதனால், செந்துறை, கல்லங்குறிச்சி, ஜயங்கொண்டம், பெரம்பலூர், திட்டக்குடி, திருமானூர் உள்ளிட்ட வெளியூரிலிருந்து வருபவர்களும், வாலாஜநகரம், குரும்பன்சாவடி, ஜெ.ஜெயலலிதாநகர், அரசு சிமென்ட் நகர், ராஜீவ்நகர், ராம்கோ சிமென்ட் ஆலை, டால்மியா சிமென்ட் ஆலை நகர்களில் வசிப்பவர்களும் ரயில் நிலையம் செல்ல அரியலூர் நகருக்கு உள்ளே வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

  ஆனால், அரியலூர் நகருக்குள் அதிகப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையிலான சாலைகள் இல்லை. இதனால், அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

  எனவே, புறவழிச் சாலையிலிருந்து ரயில் நிலையத்தை நேரடியாக இணைக்கும் வகையில், இணைப்புச் சாலையை ஏற்படுத்தினால், அரியலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறையும் என்பதால், அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai