சுடச்சுட

    

    லாரி மோதி மூதாட்டி சாவு:கிராம மக்கள் சாலை மறியல்

    By அரியலூர்  |   Published on : 18th November 2014 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரில் சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற லாரி மோதி மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தார். அந்த சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அரியலூர்- செந்துறை சாலையில் 2 தனியார் சிமென்ட் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கல் ஏற்றிச்செல்லப்படுகிறது. இந்த நிலையில், அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி பவுனாம்பாள் (60), தனது மகளை பார்ப்பதற்காக அரியலூர் அருகே உள்ள அமீனாபாத் என்ற கிராமத்துக்கு பேருந்தில் வந்து இறங்கினார். அவர் சாலையை கடந்து சென்ற போது, அந்த வழியாக சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மோதியதில் பவுனாம்பாள் அதே இடத்தில் உயிரிழந்தார்.

    இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் தனியார் சிமென்ட் ஆலைக்கு செல்லும் லாரிகள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. எனவே, வேகத்தடை அமைக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் - செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் (பயிற்சி) அசோக்குமார், உதவி ஆய்வாளர் மணிகண்டன், அரியலூர் வட்டாட்சியர் வைத்தியநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில், சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.இதனால் அரியலூர்- செந்துறை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அரியலூர் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai