சுடச்சுட

  

  10 கூட்டுறவு வங்கிகளில் கண்காணிப்பு கேமரா: ஆட்சியர்

  By அரியலூர்  |   Published on : 20th November 2014 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 2 இடங்களில் உள்ளதைப் போல, மேலும் 10 கூட்டுறவு வங்கிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

  அரியலூர் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில், புதன்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வாரவிழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:

  அரியலூர் மாவட்டத்தில் 296 கூட்டுறவுச் சங்கங்கள் இயங்குகின்றன. இவற்றில், 64 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 2014-15 ஆம் ஆண்டில் இதுவரை ரூ. 67.78 கோடி பயிர்க்கடனாகவும், ரூ. 2.39 கோடி மத்திய கால கடனாகவும், ரூ. 141.76 கோடி நகைக்கடனாகவும், ரூ. 5.93 கோடி சுய உதவிக் குழுக்களுக்கான கடனாகவும், ரூ. 2.47 கோடி தானிய ஈட்டுக்கடனாகவும், ரூ. 1.50 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கான பொருளாதாரக் கடனாகவும் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பிற்பட்ட இன மக்களுக்கு குறைந்த வட்டியில் பொருளாதாரக் கடன் வழங்குவதற்கு 728 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றுக்கு ரூ. 2.39 கோடி கடன் வழங்க மண்டல இணைப் பதிவாளர் தலைமையிலான கலந்தாய்வுக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பங்கள் தற்போது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் நல மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் வழங்க ரூ. 8.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  அரியலூர் மாவட்டத்தில், அரியலூர், ஜயங்கொண்டம் நகரக் கூட்டுறவு வங்கிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10 வங்கிகளில் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 21 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பொதுச்சேவை மையங்கள் அமைக்கப்பட்டு கணினி சிட்டா, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, ஜாதிச்சான்று போன்ற சேவைகளும், மின் ஆளுமை திட்டத்தின் கீழ், பட்டதாரி சான்று விதவைச் சான்று முதலிய சான்றுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

  திருமானூர், ஜயங்கொண்டம் பகுதிகளில் அம்மா- மருந்தகம் தொடங்குவதற்கு அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்று, விரைவில் மருந்தகம் திறக்கப்பட உள்ளது என்றார் அவர்.

  நிகழ்ச்சியில், 96 நபர்களுக்கு தனிநபர் கடனாக ரூ. 42.02 லட்சம், 61 சுய உதவிக் குழுக்களுக்கு கடனாக ரூ. 1.27 கோடிக்கான காசோலைகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஆட்சியர் வழங்கினார். சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ராஜேஸ்வரி, பெரம்பலூர் கூட்டுறவு அச்சக தலைவர் அய்யாக்கண்ணு, திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இஎஸ்கே. அன்பழகன், வேலுசாமி, ஜீவா, செந்துறை ஒன்றியக் குழுத் தலைவர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் அன்பழகன், வேளாண் இணை இயக்குநர் குணசேகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  முன்னதாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சிவ. முத்துக்குமாரசாமி வரவேற்றார். கூட்டுறவு உறுதிமொழியை பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.ஆர். ஜமால்முகமது வாசித்தார். துணைப் பதிவாளர் கா. சித்ரா நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai