சுடச்சுட

  

  அரியலூர் அருகே கோவிந்தபுரம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் ரூ. 3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சார் ஆட்சியர் சந்திரசேகர்சாகமூரி வழங்கினார்.

  இம்முகாமில் பொதுமக்கள் சார்பில் கோவிந்தபுரம் ராசாத்தி,மணக்கால் தமிழரசன், வெங்கட்ரமணாபுரம் வெங்கட்ராமன், கோவிந்தபுரம் கண்ணன் ஆகியோர் பேசினர், அவர்கள் பேசும்போது, கோவிந்தபுரம் ஊராட்சிப் பகுதியில் சாலை போட ஜல்லிக்கல் பரப்பியுள்ளனர். ஆனால் சாலை போட நீண்ட நாட்களாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை, இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான அளவு யூரியா உரம் கிடைக்கவில்லை, மணக்கால் சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

  நல்லாம்பத்தையிலிருந்து கோவிந்தபுரத்துக்கு, பள்ளி மாணவ, மாணவிகள் நடந்து செல்ல ரயில்வே சுரங்கப் பாதையை பயன்படுத்தினர்.

  அந்தச் சுரங்கப்பாதையில் தற்போது மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக இருப்பதால், மாணவ, மாணவிகள் ரயில் இருப்புப்பாதை வழியாக நடந்து செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் ரேஷன் பொருள்கள் வாங்கவும் பொதுமக்கள் ரயில்வே பாதை வழியாகத்தான் நடந்து செல்கின்றனர், எனவே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீர், சேறு, சகதியை அப்புறப்படுத்த வேண்டும்.

  அரியலூரில் இருந்து ஓட்டக்கோயில் கூத்தூருக்கு நல்லாம்பத்தை வழியாக சென்று வந்த அரசு நகரப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்றனர்.

  முகாமில் பொதுமக்களிடமிருந்து 107 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன,

  இதில் 76 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது. மேலும் 76 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 25 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகளை சார் ஆட்சியர் வழங்கினார்.

  வட்ட வழங்கல் அலுவலர் முத்துலெட்சுமி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கபிலன்,சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் பழனிவேல், கோவிந்தபுரம் ஊராட்சித் தலைவர் வீரபாண்டியன், விஏஓ இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வட்டாட்சியர் வைத்தியநாதன் வரவேற்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai