சுடச்சுட

  

  தட்டுப்பாடின்றி யூரியா கிடைக்க வலியுறுத்தல்

  By அரியலூர்,  |   Published on : 28th November 2014 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு யூரியா உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க வலியுறுத்தப்பட்டது.

  அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியது:

  பூ. விசுவநாதன்: அரியலூர் மாவட்டத்தில் மும்முரமாக நடைபெறும் சம்பா பயிருக்கு தட்டுப்பாடின்றி யூரியா கிடைக்க அந்த உரத்தை அதிகளவில் கொள்முதல் செய்து விநியோகிக்க வேண்டும். மழைக் காலங்களில் மருதையாற்று நீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க 5 இடங்களில் தடுப்பணை கட்டினால் நல்லது.

  உயர் ரக நெல்லுக்கு குவிண்டால் ரூ. 30 ஆயிரமும்,சாதா ரகத்துக்கு ரூ.27 ஆயிரமும் அரசு விலை நிர்ணயிக்க வேண்டும். இதே போல் கரும்பு, பருத்தி, சோளம்,முந்திரிக்கும் விலை நிர்ணயம் செய்வது பற்றி முத்தரப்புக் கூட்டம் கூட்டி முடிவு செய்து அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும். அதிக மழை பெய்தும் சுத்தமல்லி ஏரி, பொன்னேரி உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் இல்லை. எனவே, வரத்து வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும்.

  உலகநாதன்: அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையைவிட தனியாருக்கு அதிக அளவில் யூரியா ஒதுக்கப்பட்டுள்ளதால் அவற்றை அதிக விலைக்கு அவர்கள் விற்க வழி ஏற்படும். எனவே யூரியாவை கூட்டுறவுத் துறை மூலம் மட்டுமே விநியோகிக்க வேண்டும். தா.பழூர் ஒன்றியத்தில் விவசாயிகள் கடலூர் மாவட்டம், திட்டக்குடி, பெண்ணாடம் ஆகிய ஊர்களுக்குச் சென்று யூரியா ஒரு மூட்டை ரூ.425 கொடுத்து வாங்கி வருகிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்.

  அம்பேத்கர்வழியன்: சம்பா பயிரில் பூச்சி தாக்குதல் உள்ளதை வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்து கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப அட்டை வழங்கப்பட்டு 9 ஆண்டாகிறது. இதனால் அட்டை மிக மோசமாக உள்ளது. எனவே நகல் அட்டை வழங்க வேண்டும். கீழப்பழூவூர் பேருந்து நிலைய சாலையைச் சீரமைக்க வேண்டும்.

  என். செங்கமுத்து: அரியலூர் மாவட்டத்தில் 2013-14 ஆம் ஆண்டுக்கு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை வழங்காமல் காப்பீட்டு நிறுவனம் கால தாமதம் செய்கிறது. கணினி மூலம் இருப்பிடச் சான்று, ஜாதிச்சான்று வழங்குவதற்கு 30 நாட்களாகிறது. 3 நாட்களுக்குள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நகரில் ஷேர் ஆட்டோ இயக்க வேண்டும்.

  எஸ்.எஸ். கணேசன்: வடகிழக்கு பருவ மழைக் காலம் முடியவுள்ள நிலையிலும்கூட அரியலூர் மாவட்டத்தில் போதுமான மழை இல்லை, இதனால் குளம், குட்டை, ஏரிகளில் தண்ணீர் நிரம்பவில்லை. நிலத்தடிநீர் மட்டம் கீழே சென்று விட்டது.விவசாயம் பாதித்துள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai