Enable Javscript for better performance
அரியலூரில் விவசாயிகள் குழு நிரந்தர பயணத் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் விவசாயிகள் குழு நிரந்தர பயணத் திட்டம்

    By அரியலூர்  |   Published on : 28th January 2015 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர், ஜன. 27: அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் சார்ந்த ஒருங்கிணைந்த விரிவாக்க முறையின்கீழ் விவசாயிகள் குழு சார்ந்த நிரந்தர பயணத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் அண்மையில் தொடங்கிவைத்தார்.

    கடுகூர் ஊராட்சி அலுவலகத்தில் இத் திட்டத்தை தொடக்கிவைத்து ஆட்சியர் பேசியது: தமிழகத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சியை ஏற்படுத்த வேளாண் துறை செயலாக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பசுமைப் புரட்சியின் இலக்கான இரு மடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் என்ற குறிக்கோளை அடையும் பொருட்டு, விவசாயிகள் சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க முறை திட்டம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 201 கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டம் விரிவாக்கப் பணிகளை மேலும் செம்மைப்படுத்தவும், பண்ணை அளவில் விவசாய விளைபொருள் குழுக்களை அமைத்து, உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும், பயிர் சாகுபடி தொடர்பான இடர்பாடுகளை நீக்கி, உரிய முறையில் சந்தைப்படுத்தவும், இரண்டாம் பசுமைப் புரட்சியின் இலக்கை அடைந்திடவும், விவசாயிகள் குழு சார்ந்த நிரந்தர பயணத் திட்டம் உதவிடும்.

    இத்திட்டத்தின்படி, உதவி வேளாண்மை அலுவலர்கள் கிராம பஞ்சாயத்து வாரியாக நிரந்தர பயணத் திட்டம் தயாரித்து கிராம பஞ்சாயத்து அளவில் அமைக்கப்பட்டுள்ள விவசாய விளைபொருள் ஆர்வலர் குழு உறுப்பினர்களை இரு வாரங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்து வேளாண் தொழில்நுட்ப கருத்துகளை வழங்குவார்கள். எனவே விவசாயிகள் முழுமையாக பங்கு பெற்று பயன்பெறலாம் என்றார்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர்  ஏ.ஆர்.குணசேகரன், தோட்டக்கலை துணை இயக்குநர் சுப்பையா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)விஸ்வநாதன், வேளாண்மை உதவி இயக்குநர் முரளிதரன், ஊராட்சித் தலைவர் குரு மற்றும் வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai