100 நாள் திட்டத்தில்வேலை கேட்டு சாலை மறியல்
By அரியலூர் | Published on : 04th June 2015 03:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் அருகே 100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு தொழிலாளர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் ஒன்றியம், ஓட்டக்கோவில் ஊராட்சியைச் சேர்ந்த கூத்தூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் வசிக்கும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் வேலை வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், ஊராட்சி நிர்வாகம் வேலை வழங்கவில்லையாம்.
இதையடுத்து, அவர்கள் அரியலூர்-செந்துறை சாலையில், பொய்யாதநல்லூருக்கும், ஓ.கூத்தூருக்கும் இடையே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவராஜ் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.