செந்துறை அருகே சமையல் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து: தம்பதி காயம்
By அரியலூர், | Published on : 13th June 2015 03:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே வெள்ளிக்கிழமை காலை சமையல் எரிவாயு உருளை வெடித்து தீப்பிடித்ததில் தம்பதி இருவர் பலத்த காயமடைந்தனர்.
செந்துறை அருகேயுள்ள ராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ்(65). இவர் ராயம்புரம் கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி சரஸ்வதி(55), வெள்ளிக்கிழமை காலை வீட்டில் எரிவாயு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எரிவாயு உருளை வெடித்து தீப்பிடித்துக் கொண்டது. இதில் சரஸ்வதியும், அவரைக் காப்பாற்றச் சென்ற துரைராஜூம் பலத்த காயமடைந்தனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், தம்பதியினர் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்த செந்துறை தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர்.
இதுகுறித்து செந்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.