ஊரக வளர்ச்சித் துறையில் 154 புதிய கட்டடங்கள்
By அரியலூர், | Published on : 18th June 2015 03:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், ரூ. 14.01 கோடியில் கட்டப்பட்ட 154 புதிய கட்டடங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகப் புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் குத்துவிளக்கேற்றினார்.
ஒன்றியக் குழுத் தலைவர் செல்வராசு, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆட்சியர் இனிப்புகள் வழங்கினார். பிறகு அவர் கூறியது:
அரியலூர், திருமானூர், செந்துறை, ஜயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 2014-15 ஆம் ஆண்டுக்கான தமிழக முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 94 வீடுகள் ரூ. 1.69 கோடியிலும், செந்துறை, ஜயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் ரூ. 4.59 கோடியிலும், திருமானூர், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய சேவை மையங்கள் ரூ. 54.80 லட்சத்திலும் கட்டப்பட்டன.
மேலும், அரியலூர் ஊராட்சி ஒன்றிய 3 பள்ளிக் கட்டடங்கள் ரூ. 29 லட்சத்திலும், திருமானூர், செந்துறை, ஜயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 52 பஞ்சாயத்து சேவை மையங்கள் ரூ. 6.89 கோடியிலும் என மொத்தம் ரூ. 14.01 கோடியில் 154 புதிய கட்டடங்களை தமிழக முதல்வர் காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்துள்ளார் என்றார்.
நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே. சேகர், ஜெ. பிரபாகர், உதவிச் செயற்பொறியாளர் என். பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.