Enable Javscript for better performance
குறுவை சாகுபடி திட்டப் பயனை அனைவருக்கும் வழங்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    குறுவை சாகுபடி திட்டப் பயனை அனைவருக்கும் வழங்க வேண்டும்

    By அரியலூர்,  |   Published on : 27th June 2015 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டப் பயனை அரியலூர் மாவட்ட விவசாயிகள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

    பூ. விஸ்வநாதன்: பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 7 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக மின்இணைப்புக்காக காத்திருப்போருக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும். கோக்குடி ஏரி உள்ளிட்ட ஏரிகளை தூர்வாரவும், ஆறுகளில் தடுப்பணை கட்டவும் அரசு நிதி ஒதுக்கீடு நிலுவையில் உள்ளதை ஆட்சியர் விரைவில் பெற்றுத் தர வேண்டும். மேலும், கோக்குடி - ஆங்கியனூர் சாலையை தார்ச்சாலையாக சீரமைக்க வேண்டும். திருமானூர், தா. பழூர் ஒன்றியங்களுக்குள்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசின் சிறப்புத் திட்ட பயன்களை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பி.விஸ்வநாதன்: மணப்பத்தூர் ஊராட்சியில் சுகாதாரமான குடிநீரை வழங்கிட வேண்டும். மணப்பத்தூர் ஊராட்சியில் அபாயகரமான நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்சார வயர்களை உடனடியாக மாற்றவும், பசுந்தாள் உரம் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ஜெகநாதன்: போதிய பருவமழை இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ள முருங்கை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

    காமரசவல்லி ராஜேந்திரன்: கோவிந்தபுரம் கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் தவணை கட்ட மேலும் 2 மாதம் கால நீட்டிப்பு செய்ய வேண்டும். மண் பரிசோதனை குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மின்இணைப்பு கேட்டு காத்திருக்கும் தோட்டப்பயிர் விவசாயிகளுக்கு உடனே இணைப்பு வழங்கிட வேண்டும்.

    வாரணவாசி கி.ராசேந்திரன்: கோத்தாரி சர்க்கரை ஆலை மூலம் 2014-15 ஆம் ஆண்டில் வர வேண்டிய நிலுவைத் தொகை 50 கோடி ரூபாய். அரசு அறிவித்த விலை ரூ. 2,550 க்கு பதில் ரூ. 2,300 மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குகிறார்கள்.

    மாவட்ட ஆட்சியர் நிலுவைத் தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai