Enable Javscript for better performance
வி. கைகாட்டி அருகே லாரிகள் மோதல்: 2 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி 4 வழிச்சாலையில் டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயமடைந்தனர்.

    அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சிமென்ட் ஆலைகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவற்றிற்கு தேவையான சுண்ணாம்புக்கற்கள் கனரக லாரிகள் மூலம் ஏற்றி வரப்படுகின்றன. இவை, அதிவேகத்தில் வருவதால் அடிக்கடி சாலை விபத்துகள் நேரிட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.

    கடந்த மே மாதம் டிப்பர் லாரியும், அரசு நகரப் பேருந்தும் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். தவிர, கடந்த சில மாதங்களுக்கு முன், டிப்பர் லாரி பள்ளி வேன் மீது மோதிய விபத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து, அரியலூர் புறவழிச்சாலையில் 4 இடங்களில் ரவுண்டானா மற்றும் வேகத்தடை அமைக்கப்பட்டு, லாரிகளின் வேகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

     இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை அரியலூரை அடுத்த வி.கைகாட்டி பகுதியில் சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கற்கள் ஏற்றி வந்த 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.  இவ்விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று, அருகே இருந்த கோயிலுக்குள் புகுந்து மரத்தின் மீது மோதி நின்றது. இதில் அம்மரத்தடியில் இருந்த விநாயகர் சிலை பலத்த சேதமடைந்தது. அதிகாலை நேரம் என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இவ்விபத்தில் சீர்காழியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வேந்திரன் (26), காணிக்கைபுரத்தைச் சேர்ந்த மற்றொரு லாரி ஓட்டுநர் சாமிக்கண்ணு (28) ஆகியோர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதனால் வி.கைகாட்டி நான்கு வழிச்சாலை பகுதியில் அவ்வப்போது விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. இவ்விபத்துகளை தடுக்க அப்பகுதியில் ரவுண்டானா,வேகத்தடை ஆகியவைகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai