Enable Javscript for better performance
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான இருநாள் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
    பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் புதுதில்லி தேசியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனமும், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சி நடத்தி வருகிறது.  அந்த வகையில் நிகழாண்டுக்கான (2016-17) வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி தொடங்கியது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்காலம் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
    கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந. மாரிமுத்து குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் வ. ராதாகிருஷ்ணன், ஜம்புலிங்கம், நேர்முக உதவியாளர் ஆர். பொய்யாமொழி, மாவட்ட ஆர்.எம்.எஸ்.ஏ. திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் பி. பெருமாள், தலைமை ஆசிரியர்கள் காந்தி, கணேசன், அண்ணாதுரை, இசபெல்லாமேரி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சிநாதன், பள்ளியின் துணை ஆய்வாளர் ஆர். பழனிசாமி, மாவட்ட உடற்கல்வி இயக்குநர் (பொ) முடியழகன் உள்ளிட்டோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
    இக்கண்காட்சியானது 4 பிரிவுகளில் மாணவர்களுக்கும், ஒரு பிரிவில் ஆசிரியர்களுக்கும் நடத்தப்பட்டது. வளமான தேசத்தை உருவாக்குவதில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதத்தின் பங்கு என்ற மைய தலைப்பில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
    இதில் முக்கிய ஆறு துணை தலைப்பாக சுகாதாரம், தொழிற்சாலை, போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு, சுற்றுச்சூழலுக்கு தேவையான வளங்கள், உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு, அன்றாட வாழ்வில் கணிதத்தின் பங்கு உள்ளிட தலைப்புகளில் மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றன.
    கண்காட்சியில், 62 உயர்நிலைப்பள்ளிகள், 47 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 109 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
    கண்காட்சியை அரியலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு சென்றனர்.
    கண்காட்சியில் வெற்றி பெறும் மாணவர்கள் மதுரையில் நவம்பர் 23 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ள 44-வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான கண்காட்சியில் கலந்துகொள்ள தகுதி பெறுவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai