தா.பழூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்
தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அரியலூர் மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா வியாழக்கிழமை ஆய்வுசெய்தார்.
தா.பழூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஸ்ரீபுரந்தான் ஊராட்சியில் பிரதமரின் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.1.7 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வீடுகட்டும் பணிகளை ஆட்சியர் லட்சுமி பிரியா ஆய்வுசெய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அப்போது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பெற்றோர்களுக்கும் அப்பகுதியில் உள்ள செவிலியர்களுக்கும் உடனடியாக தெரிவித்து, சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். பள்ளி மற்றும் அங்கன்வாடியின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் லட்சுமிபிரியா அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்து, பதிவேடுகளை சரிபார்த்தார்.
தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ், ரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் தனிநபர் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகேஸ்வரி, உதவித்திட்ட அலுவலர் வர்கீஸ், ஊராட்சிகள் துறை உதவி இயக்குநர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
