கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் சங்கத்தின் (ஜாக்டோ-ஜியோ) ஒரு பிரிவினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினர்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அதற்கு முன் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் செப்.7 முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அந்த அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முதல்வர் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கால அவகாசம் கேட்டுக்கொண்டதின்பேரில் ஜாக்டோ-ஜியோவின் ஒரு பிரிவினர் போராட்டத்தை தாற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்தனர்.
ஆனால் ஜாக்டோ ஜியோவின் ஒரு பிரிவினர் அறிவித்தபடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.
அதன்படி வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். இதில் அரியலூரில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் வேலைக்குச் செல்லவில்லை. அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோவின் ஒரு பிரிவினர், அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மறியலில் ஈடுபட்ட 148 பேரைக் கைது செய்து மாலையில் விடுவித்தனர். அமைப்பின் மாவட்ட நிர்வாகி பஞ்சாபிகேசன் தலைமை வகித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.