அரியலூர் புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட தரைக்கடைகளால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
கடந்த 1975ஆம் ஆண்டு அரியலூர் நகராட்சி அருகே அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்ததோடு, ஏராளமான புதிய போக்குவரத்து வசதிகள் கிடைத்தன.
இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினந்தோறும் அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வது உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை.
பேருந்துக்காக பயணிகள் காத்திருக்கும் இடத்தை தரைக் கடைகள் அதிகளவில் ஆக்கிரமித்திருப்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, கடந்த மாதம் பேருந்து நிலையத்தினுள் இருந்த ஆக்கிரமிப்பு தரக்கடைகள் அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சில நாள்கள் இல்லாமல் இருந்த தரைக்கடைகள் தற்போது மீண்டும் ஆக்கிரமித்திருக்கின்றன.
இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஆக்கிரமித்துள்ள தரைக்கடைகள் முழுமையாக அகற்றுவதோடு, மீண்டும் அமைக்காத வகையில் தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாகி இருக்கிறது.