4 ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் 186 பயனாளிகளுக்கு ரூ.95 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமை அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தொடக்கி வைத்துப் பேசியது: கைத்தறி நெசவாளர்களை கெளரவிக்கும் பொருட்டு 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு 4 ஆவது தேசிய கைத்தறி தினவிழாவினை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெறுகிறது என்றார்.
தொடர்ந்து அவர், பிரதம மந்திரியின் நெசவாளர்களுக்கான முத்ரா திட்டத்தில் 139 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் காசோலைகள், டாக்டர்.எம்.ஜி.ஆர் அறக்கட்டளையின் கீழ் 10 நெசவாளர்கள் குழந்தைகளுக்கு ரூ.54 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள், திருச்சி கைத்தறி குழுமம் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.62 ஆயிரம் மதிப்பில் தறி உபகரணங்கள் உள்படமொத்தம் 186 பயனாளிகளுக்கு ரூ.95 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து அங்கு நடைபெற்ற கைத்தறி கண்காட்சியினை அவர் பார்வையிட்டார்.
அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் க.திருவாசகர், ஜவுளி ஆலோசனை உயர்மட்டக் குழு உறுப்பினர் கே.ஜெ.லெனின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கரூர் : கரூர் மாவட்டத்தில் இதுவரை 1,453 நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தில் ரூ.6.94 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்தார்.
கரூர் வெங்கமேட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4 ஆவது தேசிய கைத்தறி தின விழா மற்றும் கைத்தறி கண்காட்சி, நெசவாளர்களுக்கான பொது மருத்துவ முகாம் ஆகியவற்றை துவக்கி வைத்து அவர் மேலும் பேசியது:
ஆக. 7 ஆம் நாள் கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழக அரசு, நெசவாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர ரூ. 1.55 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கரூர் மாவட்டத்தில் 2015-16ம் ஆண்டில் 271 பேருக்கு ரூ.1.35 கோடியும், 2016-17 ஆம் ஆண்டில் 445 பேருக்கு ரூ.2.15 கோடி, 2017-18 ஆம் ஆண்டில் 625 பேருக்கு ரூ.2.87 கோடி, 2018-19 ஆம் ஆண்டில் இதுவரை 112 பேருக்கு ரூ.56 லட்சமும் என மொத்தம் 1,453 பேருக்கு ரூ.6.94 கோடி முத்ரா திட்டத்தில் நெசவாளர் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், கைத்தறி உதவி இயக்குநர் வெற்றிச்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் சரவண மூர்த்தி, கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் ஏ.ஆர்.காளியப்பன், எஸ்.திருவிகா, எம்.செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.