Enable Javscript for better performance
நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 24th March 2018 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் கடந்தாண்டைப்போல, நிகழாண்டும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
    அரியலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள்குறைதீர் கூட்டம் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
    அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் என். செங்கமுத்து: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு, நெல்லுக்கு விலை அளிப்பதுபோல், பருத்தி, மக்காச்சோளம், கடலை, பயிர் வகையான உளுந்து, துவரை, பச்சை பயிர் மற்றும் அனைத்து வகை காய்களுக்கும் உரிய விலை அறிவித்து மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். அனைத்து வகை விவசாயிகளுக்கும் பாகுபாடுகள் இல்லாமல் விவசாய கடன்களை கூட்டுறவுத் துறைகள் வழங்க வேண்டும்.
    தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விஸ்வநாதன்: கடந்தாண்டைபோல நிகழாண்டும், ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும். சிமென்ட் ஆலைகளைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட ஆணைவாரி ஓடைப்பாலத்துக்கான தரைத்தளத்தை விரைந்து அமைக்க நடவடிக்கை தேவை.
    செந்துறை அருகே துளார் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மக்கள் நலன் கருதி உடனடியாக அகற்ற வேண்டும்.
    தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன்: பொன்னாற்றின் தலைப்பில் கொள்ளிடத்தின் குறுக்கே குருவாடியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.அதற்கான நிதியை நிகழ் நிதியாண்டிலேயே தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். வரையறை செய்து அனுப்பபட்ட 45 ஏரிகளை உடனே தூர்வார வேண்டும். உளுந்து பயிருக்கு பயிர் காப்பீடுத் தொகையை வழங்க வேண்டும். மின் இணைப்புக்காக காத்திருக்கும் சிறுகளத்தூர் மற்றும் சீபுரந்தான் விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும்.
    தமிழக அம்பேத்கர் விவசாயிகள் இயக்க மாநில தலைவர் அம்பேத்கர் வழியன்: அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிட ஆற்றின் குறுக்கே திருமானூர், திருமழப்பாடி, குருவாடி, ஏலாக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காமரசவல்லி ஏரியை தூர்வார வேண்டும்.
    அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம்: மருதையாற்றின் குறுக்கை தடுப்பணைக் கட்டி, அதன் உபரி நீரை கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கு திருப்பி விட வேண்டும்.
    தொடர்ந்து, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வாரணவாசி ராஜேந்திரன், விவசாயிகள் நல்லுசாமி, ஜெயச்சந்திரன் உள்ளிட்டோரின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்தார் ஆட்சியர் மு.விஜயலட்சுமி.
    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகேஸ்வரி, வேளாண் துணை இயக்குநர் பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இரா.தயாளன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(நீர்வள ஆதாரம்) ஆ.தெய்வீகன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அன்புராஜன் மற்றம் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai