"தமிழுக்குச் செழுமை சேர்த்தவர் வீரமாமுனிவர்'

தமிழுக்குச் செழுமை சேர்த்து சதுரகராதி கண்ட பெருமை வீரமாமுனிவரையே சாரும் என்றனர் பேராசிரியர்கள்.

தமிழுக்குச் செழுமை சேர்த்து சதுரகராதி கண்ட பெருமை வீரமாமுனிவரையே சாரும் என்றனர் பேராசிரியர்கள்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் வீரமாமுனிவர் பிறந்த நாள் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதில் அந்தக் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர். ரகுநாதன், கல்வி நிறுவனங்களின் இயக்குநர் த. ராஜமாணிக்கம், ஆலோசகர் தங்க. பிச்சையப்பா,தமிழ்த் துறை பேராசிரியைகள் அ. ஹேமலதா, பானுப்பிரியா, பேராசிரியர்கள் பழனியாண்டி, ராஜீவ், விநாயகவேல் ஆகியோர் பங்கேற்று பேசியது: 
இத்தாலி நாட்டில் பிறந்த வீரமாமுனிவர், கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில்  1710 ஆம் ஆண்டில் தமிழகம் வந்தார். மறை பரப்ப முதலில் தமிழைக் கற்றுக் கொண்ட இவர் தனது பெயரை வீரமாமுனிவர் தமிழில் மாற்றிக் கொண்டார்.
தமிழகம் வந்த பின் சுப்ரதீக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று  புலமை பெற்றார்.  திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார். தமிழ் கற்க ஏதுவாக தமிழ் லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.
 பின்பு 4,400 சொற்களைக் கொண்ட தமிழ்,போத்துக்கீசிய அகராதியை உருவாக்கினார். திருக்காவலூர் கலம்பகம் பாடினார். பொருளகராதி, தொகையகராதி,சதுரகராதி கண்ட பெருமையும் வீராமுனிவரையே சாரும். கவிதை வடிவில் இருந்த தமிழ் இலக்கிய இலக்கணங்களை உரைநடையாக மாற்றியவர். திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்.
உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்ந்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.  
23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், ஏசுவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளை தேம்பாவணி என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்று. தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர். தமிழுக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள பணிகள் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் என்றனர்.  பேராசிரியர் கு. வேல்முருகன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com