அரியலூரில் பேரிடர் குறைப்பு தின ஒத்திகை

உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூரில் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது. 

உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூரில் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது. 
அரியலூர் நிர்மலா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் மு. விஜயலட்சுமி கலந்து கொண்டு பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியானது பிரதான சாலை வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் முடிந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாககளை கையில் ஏந்திச் சென்றனர். அரியலூர் பேருந்துநிலையத்தில், ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீயணைப்புத் துறையினர், பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், அரியலூர் கோட்டாட்சியர் நா.சத்தியநாராயணன், அரியலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்கள் விக்டோரியா,,சு.முத்துலட்சுமி மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில் பெயரளவுக்கு நடைபெற்ற ஒத்திகை:   பெரம்பலூரில் பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை மற்றும் அவசர கால மீட்பு நடவடிக்கைகள் பெயரளவுக்கு சனிக்கிழமை நடத்தப்பட்டன.  
பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 
நிகழ்ச்சியில், தீயணைப்புத்துறை மூலம் ஏரி, குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு, மீட்பு பணியின்போது 100 மீட்டர் சுற்றளவுக்கு வெளிச்சம் தரக்கூடிய உயர் கோபுர விளக்கு, உயிர்காக்கும் மிதவை மற்றும் உடை, இரும்பு பொருள்களை வெட்டுவதற்கு தேவைப்படும் ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு, விபத்து நேரங்களில் வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவும் ஏர் லிப்டிங் ஆகிய பொருள்கள் வைக்கப்பட்டு  செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.  
மேலும், தீயணைப்புத் துறை மூலம் விபத்து மற்றும் வெள்ள நேரங்களில் பொதுமக்களை காப்பாற்ற, விபத்தில் நடக்க இயலாத நிலையில் உள்ளவரை விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்வது, வீடுகளில் சமையல் செய்யும்போது ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது குறித்த செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது. 
ஆனால், ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பான எவ்வித முன்னறிவிப்பும் இல்லாததால், இவற்றை பார்வையிட பொதுமக்கள் தரப்பில் இருந்து ஒருவர் கூட பங்கேற்கவில்லை.  பெயரளவில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் உள்பட நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சிலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com