சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்துவோர் தப்ப முடியாது

சமூக வலைதளங்களை  தவறாகப் பயன்படுத்துவோர் தப்ப முடியாது என்றார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி. சுமதி.

சமூக வலைதளங்களை  தவறாகப் பயன்படுத்துவோர் தப்ப முடியாது என்றார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி. சுமதி.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஜயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து குடும்ப நல சட்டங்கள் மற்றும் சைபர் கிரைம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இந்த முகாமுக்கு அவர் தலைமை வகித்து நீதிபதி சுமதி பேசியது:
ஒரு காலத்தில் அறிமுகமில்லாத நபர் ஒரு தெருவுக்குள் புகுந்தால், அங்கு வசிக்கும் முதியவர்கள், அவரைத் தடுத்து நிறுத்தி நீங்கள் யார் என்று விசாரிப்பார்கள். ஆனால் இன்றைக்கு முதியவர்களை எல்லாம் முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்ககூடிய நிலைமையை பார்க்கிறோம். ஆதலால் தான் ஊருக்குள் சிசிடிவி கேமராவை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
இன்றைக்கு அறிவியல் சார்ந்த தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இது நல்ல விஷயம் என்றாலும், பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் மூழ்கி தேவையில்லாத இணையதளங்களில் தங்களது பொன்னான நேரத்தை வீணடிக்கின்றனர். கருத்து என்ற பெயரில் தேவையில்லாத சர்ச்சை, அவதூறு பரப்புதல், பெண்களை கேலி செய்தல், பெண்களை படம் எடுத்து மிரட்டுதல் போன்ற சைபர் குற்றங்களை செய்து தண்டிக்கப்படுகின்றனர்.
இருந்த போதிலும் இதுபோன்ற குற்றங்கள் குறையவில்லை. இதுபோன்ற குற்றங்களை சைபர் கிரைம் கண்காணித்துக் கொண்டு இருக்கிறது. 
அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. சமூக வலைதளங்களில் யார் எந்த தவறு செய்தாலும், அவர்கள் அதை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். 
எனவே மாணவர்களாகிய நீங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது அறிவு சார்ந்த விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்துங்கள். 
அதுதான் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் நல்லது என்றார் அவர்.இம்முகாமில் சார்பு நீதிபதி சரவணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதிராஜா,மாடர்ன் கல்வி குழும தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் சுரேஷ், ஜயங்கொண்டம் பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் செல்லமணிமாறன், வழக்குரைர்கள் அரியலூர் சுதந்திரகுமார், பகுத்தறிவாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக கல்லூரி முதல்வர் திருவள்ளுவன் வரவேற்றார். முடிவில் கல்லூரி முதல்வர் அருள் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com