அரியலூரில் தயார் நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள்
By DIN | Published On : 18th April 2019 08:38 AM | Last Updated : 18th April 2019 08:38 AM | அ+அ அ- |

சிதம்பரம் (தனி) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை (18 ஆம் தேதி) அரியலூர் மாவட்டத்தில் நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் புதன்கிழமை நடைபெற்றன.
கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம், அரியலூர்,பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை ஓய்ந்தது.
மேற்கண்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதற்றமான மற்றும் நெருக்கடியான 201 வாக்குச் சாவடிகளில் வெப் ஸ்டீரிமிங் கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப் பதிவு விவரங்கள் ஆட்சியரகத்தில் இருந்தே கண்காணிக்கப்படுகிறது.
மேலும் அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
வாக்குச் சாவடிகளில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் என 6,912 பேர் பணியில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு பணியில் தமிழக போலீஸாருடன், மத்திய ரிசர்வ் படை, ஊர்காவல் படை என 3,259 பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கண்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2121 வாக்குப் பதிவு இயந்திரங்கள்,2,232 விவிபேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் அழியாத மை உள்ளிட்ட 126 பொருள்கள் அனைத்தும் அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்குப் பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்படும். அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.