சணல் பை, அகர் பத்தி தயாரிப்பு இலவசப் பயிற்சி பெற அழைப்பு
By DIN | Published On : 21st April 2019 04:01 AM | Last Updated : 21st April 2019 04:01 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் சணல் பை மற்றும் அகர்பத்தி தயாரிப்பது தொடர்பாக இலவசப் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் சணல் பை மற்றும் அகர்பத்தி தயாரிப்பு பயிற்சி வகுப்புகள் ஏப். 24 முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற 18 முதல் 45 வயதுக்கு குறைவாகவும், எழுதப் படிக்க தெரிந்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.
அகர்பத்திக்கு 10 நாள்களும், சணல் பைக்கு 13 நாள்களும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படும் பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக அளிக்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் அளவு, 1 ஸ்டாம்ப் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஏப். 23 ஆம் தேதி நடைபெறும் நேர்முக தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சி அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஐஓபி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் - 621212 என்னும் முகவரியிலோ அல்லது 04328 277896 என்னும் எண்ணிலோ தொடர்புகொள்ளவும்.