சர்ச்சைக்குரிய விடியோ வெளியிட்டதாக இரு இளைஞர்கள் கைது
By DIN | Published On : 21st April 2019 04:01 AM | Last Updated : 21st April 2019 04:01 AM | அ+அ அ- |

சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய விடியோ வெளியிட்ட இளைஞர்கள் இருவரை குன்னம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில், பாமக,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடையே, கடந்த 18 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் வீடுகளை பாமகவை சேர்ந்த கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடியது.
இதன் எதிரொலியாக, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அசூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் மகன் உதயகுமார் (22), ராஜேந்திரன் மகன் ராஜேஷ்குமார் (23) ஆகியோர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தாக்கிய, வன்னியர் சமூகத்தினரை தரக்குறைவான வார்த்தைகளில் அவதூறாகப் பேசியதுடன், மோதலுக்கு அழைப்பு விடுத்து சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.
இது, அப்பகுதியைச் சேர்ந்த இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகக் கருதி, அசூர் விஏஓ மணிமேகலை குன்னம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்தார். குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் கண்ணன் வழக்குப் பதிந்து, உதயகுமார், ராஜேஸ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கிறார்.