ஆடிப்பெருக்கு: கோயில்கள், நீர்நிலைகளில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 04th August 2019 03:38 AM | Last Updated : 04th August 2019 03:38 AM | அ+அ அ- |

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் நீர்நிலைகளில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆடிப்பெருக்கையொட்டி மாவட்டத்தின் நகர்ப்பகுதியில் உள்ள சிவன் கோயில், பெருமாள் கோயில், மாரியம்மன் கோயில், செட்டிஏரி விநாயகர் கோயில், சுப்பிரமணியசுவாமி கோயில், திருமழபாடி வைத்தியநாதசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பால்குடத் திருவிழா... ஆடிப்பெருக்கை முன்னிட்டு அரியலூர் நீதிமன்றம் அருகேயுள்ள அகோர வீரபத்திர சுவாமி கோயில், வண்ணாங்குட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தேசமாரியம்மன் கோயில், அதிகார படையாச்சி தெருவில் உள்ள காளியம்மன் கோயில், கவரத் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. பால் குடம், தீச்சட்டி, அலகு காவடி எடுத்துவந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். இதேபோல் திருமானூர், ஜயங்கொண்டம், செந்துறை, தா.பழூர், பொன்பரப்பி, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதியிலுள்ள அனைத்து கோயிலில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நீர்நிலைகளில்.... அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதிகளான திருமழபாடி, திருமானூர், தா.பழூர், சுத்தமல்லி,விக்கிரமங்கலம், அணைக்கரை போன்ற இடங்களில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது. காலை 6 மணி முதலே பொதுமக்கள் ஆற்றின் கரையோரம் குவியத் தொடங்கினர். புதுமணத் தம்பதிகள் ஆற்றின் கரையோரக் கோயில்களான திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில், ஆலந்துறையார் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே வளர்த்து வந்த முளைப்பாரியை ஆற்றுக்கு எடுத்து வந்து கரைத்தனர்.
மேலும், புதுமணத் தம்பதிகள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
கொள்ளிடம் ஆற்றில் நீராடி திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டனர். பின்னர் தாலி பூஜை நடத்தினர். வாழை இலையில் காப்பரிசி, மஞ்சள், குங்குமம், காதோலைக் கருகமணி, பழ வகைகள் போன்றவற்றை வைத்து பூஜை நடத்தினர். புதுமணத் தம்பதியர் மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனர். இதுபோல் புதுமணத் தம்பதியர் மட்டுமல்லாமல் ஆண்கள் கைகளிலும், பெண்கள் கழுத்திலும் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். நிகழாண்டு விவசாயம் செழிக்க வேண்டுமென விவசாயிகள் வழிபட்டனர். தாலி பாக்கியம் நிலைக்கக் கோரி பெண்கள் நவதானியங்களுடன் முளைப்பாரி எடுத்துவந்து காவிரிக்கரையில் வைத்து பூஜை செய்து ஆற்றில் விட்டு வழிபட்டனர்.
இதேபோல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளையும் பொதுமக்கள் வழிபட்டனர்.
பெரம்பலூரில்... ஆடிபெருக்கை முன்னிட்டு பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோயில் எதிரே அமைந்துள்ள 40 அடி உயரம் உள்ள கம்பத்து ஆஞ்சேநேயருக்கு காவிரி தீர்த்த அபிஷேகம் கடந்த 100 ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அதன்படி, பெரம்பலூரைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு சென்று, காவிரி தீர்த்தக் குடங்களுடன் பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சனிக்கிழமை வந்தனர்.
அங்கு, மங்கல வாத்தியம் முழங்க, வாணவேடிக்கையுடன் தெற்கு தெரு, கடைவீதி வழியாக மதனகோபாலசுவாமி வந்து, கோயில் எதிரேயுள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு காவிரி தீர்த்த அபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. இதில், பெரம்பலூர் நகரைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளைத் தரிசனம் செய்தனர்.
பால்குடம் எடுத்தல்:
பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலம் நடுத்தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலில் அலகு குத்துதல், பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர், காவிரி தீர்த்தம் மூலம் மகாமாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகளை நடைபெற்றது.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில்: ஆடிப் பெருக்கை முன்னிட்டு மதுரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜைகளும், தீப ஆராதனைகளும் நடத்தப்பட்டது. இதில் புதுமணத் தம்பதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.