அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்படும்

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்படும் என்றார் சட்டப்பேரவை மனுக்கள் குழுவின் தலைவரும், அரசுத் தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை மனுக்கள் குழு ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, அவர் மேலும் பேசியது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மக்கள் நலனுக்கான திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தி வந்தார். அந்த வழியில் தற்போதைய அரசும் செயல்படுத்தி வருகிறது. 
மாவட்டத்தில் ரூ.2.68 கோடியில் அரியலூர் போக்குவரத்துக் காவல் நிலையம் உள்பட 6 காவல் நிலையங்களுக்கு கூடுதல் கட்டடம் கட்டித் திறக்கப்பட்டுள்ளது.இதுபோன்று அனைத்துத் துறைகளிலும் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.  
பொதுமக்களின் முக்கிய பிரச்னைகளைத் தேர்வு செய்து ஆய்வு செய்திட மனுதாரரையும், அதற்குரிய உயரதிகாரிகளையும் நேரடியாக அழைத்து  உடனடியாகத் தீர்வு செய்யக்கூடியதாக சட்டப்பேரவை மனுக்கள் குழு செயல்படுகிறது. 
 பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 134  மனுக்களில் தேர்வு செய்யப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்து, சட்டப் பேரவை மனுக்கள் குழுவால் பரிந்துரை  செய்யப்பட்டு பேரவைக்கு அளிக்கப்பட்ட 41 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மறுஆய்வு  செய்யப்படவுள்ளது.
 மேலும் தகுதியுடைய இதர மனுக்களின் மீதும் உரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தும் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்றார் அவர்.
தொடர்ந்து  அரியலூர் பேருந்துநிலையத்தில் இருந்து ஜயங்கொண்டம்-திருமுட்டம் வழியாக கருக்கை-நாகம்பந்தலுக்கு புதிய வழித்தட பேருந்தை அவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் முன்னிலை வகித்தார். மனுக்கள் குழுவின் உறுப்பினர்களான சட்டப்பேரவை உறுப்பினர்கள் வானூர் மு.சக்கரபாணி,  கும்மிடிப்பூண்டி கே.எஸ்.விஜயகுமார், ஏற்காடு கு.சித்ரா, காங்கயம் உ.தனியரசு, கும்பகோணம் க.அன்பழகன், வேப்பனஹள்ளி பி.முருகன்  மற்றும்  சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜயங்கொண்டம் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம்,குன்னம்  ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல், மாவட்ட வருவாய்  அலுவலர் கா.பொற்கொடி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com