ராகு,கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 14th February 2019 08:58 AM | Last Updated : 14th February 2019 08:58 AM | அ+அ அ- |

ராகு,கேது பெயர்ச்சியை முன்னிட்டு அரியலூர் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள், அதாவது நிழல் கிரகங்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நவகிரகங்களில் சூரியன் முதல் சனி வரை உள்ள 7 கிரகங்களுக்கு ராசிக் கட்டத்தில் ஆட்சி வீடு எனப்படும் சொந்த வீடு உள்ளது. ஆனால், ராகுவுக்கும் கேதுவுக்கும் சொந்த வீடு இல்லை. ஒருவரின் ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் எந்த ராசியில் பெயர்ச்சியாகிறார்களோ அந்த ராசிக்கு உரிய பலன்களைத் தருவார்கள் என்பது ஐதீகம்.
அந்த வகையில் புதன்கிழமை பிற்பகல் 2.02 மணிக்கு, ராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர்ந்தனர். இதையொட்டி அரியலூர் கைலாசநாதர், ஆலந்துறையார் கோயில்களில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து,கோயில் சன்னதியிலுள்ள ராகு,கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனை நடத்தப்பட்டது. பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளான ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகாரர்கள் சிறப்பு ஹோமத்திலும், ராகு,கேது பெயர்ச்சி நேரத்திலும் கலந்து கொண்டு, ராகு,கேது பகவானை வழிபட்டனர்.
இதேபோல செந்துறை,பொன்பரப்பி,திருமானூர்,தா.பழூர்,ஆண்டிடம்,ஜயங்கொண்டம்,மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.