முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
பிரதம மந்திரி ஓய்வூதியத் திட்டம்: சந்தா தொகையைச் செலுத்த தொழிலாளர்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 28th February 2019 11:11 AM | Last Updated : 28th February 2019 11:11 AM | அ+அ அ- |

பிரதம மந்திரி ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெற விரும்பு அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சந்தா தொகையை செலுத்த வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் 42 கோடிக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள், தெருவோர வியாபாரம், ரிக்ஷ தொழில், கட்டுமானம், பழைய பொருள்கள் சேகரித்து வாழ்பவர்கள், வீட்டு வேலை செய்வோர், நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், பீடி சுற்றுபவர்கள், கைத்தறி தொழிலாளர்கள், தோல் பதனிடும் தொழில் செய்பவர்கள் மற்றும் இதுபோல் பல்வேறு தொழில்களை செய்கின்றனர்.
இவர்களுக்கு பிரதான் மந்திர் சரம்-யோஜி மந்தான் என்ற ஓய்வூதிய திட்டம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு வயதான கால பாதுகாப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதில் தொழிலாளரின் மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தொழிலாளி அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டு உள்ளவராக இருக்க வேண்டும். 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் சேர்ந்து மாதந்தோறும் சந்தா செலுத்த வேண்டும்.
60 வயதுக்கு பிறகு ரூ.3,000 மாத ஓய்வூதியம் பெறலாம். சம்பந்தப்பட்ட தொழிலாளர் மரணம் அடைந்தால் 60 வயதுக்கு பிறகு அவரது வாழ்க்கை துணையான கணவன் அல்லது மனைவிக்கு 50 சதவீதம் தொகை குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
தொழிலாளர் பதிவு செய்து 60 வயதுக்கு முன்பாக திடீரென்று இறந்து விட்டால் அவரது கணவர் அல்லது மனைவி தொடர்ந்து சந்தாவை செலுத்தி வந்து பயன் பெறலாம். குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவர் மாதந்தோறும் ரூ.55-ம், அதிகபட்சமாக 40 வயது நிரம்பியவர் மாதந்தோறும் ரூ.200-ம் செலுத்த வேண்டும். அதே அளவிலான 50 சதவீத பங்குத் தொகையை மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு மாதமும் பயனாளியின் கணக்கில் செலுத்தப்படும். வயது வாரியாக சந்தா தொகை மாற்றம் உள்ளது.
இந்த திட்டம் குறித்து உதவி மையங்களை அணுகி பயன் பெறலம். எல்.ஐ.சி. அலுவலகங்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இ.பி.எப்), தொழிலாளர்கள் ஈட்டுறுதி நிறுவன அலுவலகம் (இ.எஸ்.ஐ.சி), மாவட்ட தொழிலாளர் நல அலுவலகம், அரசு சி.எஸ்.சி. மையங்களை அணுகி பயன் பெறலாம்.