பொங்கல் திருநாள்: பொருள்களை வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம்

பொங்கல் திருநாளையொட்டி பொருள்களை வாங்க குவிந்த கூட்டத்தால் அரியலூர் கடைவீதிகளிலும்

பொங்கல் திருநாளையொட்டி பொருள்களை வாங்க குவிந்த கூட்டத்தால் அரியலூர் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் திங்கள்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
வயலில் அறுவடைச் செய்த புதுநெல்லிலிருந்து கிடைக்கப் பெற்ற அரிசி, வெல்லம், பால், நெய் சேர்த்து, புதுப்பானையில் புதிய அடுப்பில் வைத்து பொங்கல் செய்து சூரியனுக்கும்,இறைவனுக்கும் படைத்து இயற்கைக்கு நன்றி கூறும் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் தமிழர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த விழாவின் போது, தமிழர்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, புத்தாடை அணிந்து, செங்கரும்புடன் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவர். பொங்கலுக்கு முதல் நாளான திங்கள்கிழமை போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. 
பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகி என்ற சொலவடைக்கேற்ப மக்கள், தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருள்களை கழித்து, புதிய பொருள்களை வாங்கி சேர்த்தனர்.  
பொங்கல் திருநாள்  செவ்வாய்க்கிழமை  கொண்டாடப்படும் நிலையில், அரியலூரில் உள்ள மார்க்கெட்,கடைவீதி,வெள்ளாளத் தெரு உள்ளிட்ட அனைத்து சந்தைகள், கடைவீதிகளில் பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கடைகளில் பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், காய்கறிகள், புதுப்பானைகள், பானைகளுக்கு கட்டுவதற்கான மஞ்சள், இஞ்சிக் கொத்துகள், புதிய அடுப்புகள், செங்கரும்புகள் போன்றவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். தொடர்ந்து பொங்கல் மூன்று நாள்கள் கொண்டாடப்படுவதால்,பொதுமக்கள் பொங்கலுக்குத் தேவையான பொருள்களை வாங்கியதால், காய்கறிகள், பூ, பழங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
ரயில், பேருந்துகளில் நெரிசல் :   வெளியூர்களிலிருந்து அரியலூர் ,செந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களும், இதர பணியாளர்களும் விடுமுறைக்காக சொந்த ஊர் நோக்கிச் செல்வதற்காக, பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் காத்திருந்து தங்களது ஊர்களுக்கு சென்றனர் .
திருச்சி,தஞ்சை,விருத்தாசலம்,பெரம்பலூர்,கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதே போல் அரியலூர் ரயில் நிலையத்திலும் வழக்கத்தை விட திங்கள்கிழமை காலை முதலே மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com