அரியலூர், பெரம்பலூரில்  பொங்கல் கொண்டாட்டங்கள்

அரியலூர் மாவட்ட காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவல் துறை சார்பில் பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

அரியலூர் மாவட்ட காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவல் துறை சார்பில் பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
காவல் துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இந்தப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட காவல் துறையினர் தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்து,  குடியிருப்பு வளாகத்தில் புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். பின்னர் அவர்கள் மஞ்சள் கொத்து, செங்கரும்பு உள்ளிட்ட பொருள்களை வைத்து சூரிய பகவானை வழிபட்டனர். விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு, 
புதுப்பானையில் சமைத்த பொங்கலை சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபட்டார். 
பெண் காவலர்கள், ரங்கோலி, கம்பிக் கோலம், பூக்கோலம், பொங்கல் கோலம், விளக்கு கோலம் உள்ளிட்ட கோலங்களை போட்டிருந்தனர். மேலும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.  
வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் வழங்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு களைப்பைப் போக்கும் வகையில், தா. பழூர், மீன் சுருட்டி ஆகிய பகுதிகளில்  காவலர்கள் தேநீர் வழங்கினர்.
பெரம்பலூரில்... 
திருநங்கைகள் கொண்டாடிய பொங்கல்:  எம்.ஜி.ஆர் நகரில் திருநங்கைகள் குடியிருப்பு பகுதியில் திருநங்கைகள் ஒன்றுசேர்ந்து செவ்வாய்க்கிழமை  பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர். 
புதிய பானையில் பொங்கல் வைத்து, செங்கரும்புகளால் தோரணம் கட்டி, வீதி முழுவதும் வண்ணக்கோலமிட்டு அப்பகுதியை அலங்கரித்தனர். வெல்லம் கொண்டு தயாரித்த இனிப்பு பொங்கலை அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தனர். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  
எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் பொங்கல் விழா: மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் அன்னை சித்தர் எஸ். ராஜ்குமார் சுவாமிகள் தலைமையில் அதிகாலை 4.30 மணியளவில் பிரம்மரிஷி மலையில் மகரதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தி, 210 சாதுக்களுக்கு கரும்பு தானமும், காசு தானமும் வழங்கினார். ஏற்பாடுகளை அறக்கட்டளை இணை நிர்வாகி ரோகினி மாதாஜி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com