அரியலூரில் குடிமராமத்து பணிக்கு ரூ.2.46 கோடி ஒதுக்கீடு

அரியலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப் பணிக்கு ரூ.2.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.


அரியலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப் பணிக்கு ரூ.2.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம், அயன்ஆத்தூர் கிராமத்தில் பொதுப் பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, மருதையாறு வடிநிலக் கோட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடிமராமத்து பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
தொடர்ந்து அவர், அயன்ஆத்தூர் உடையான் ஏரியில் 4,350 மீட்டர் கரையை பலப்படுத்துதல், வரத்துவாய்க்கால் தூர்வாருதல், பாசன வாய்க்கால் மதகு சரிசெய்தல் போன்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் டி.தட்சணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, வை.வேல்முருகன், வட்டாட்சியர் கதிரவன், நிலஅளவைத்துறை அலுவலர் மற்றும் கிராம பாசனதாரர்கள் சங்கத்தினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 
அரியலூர் மாவட்டத்தில் மருதையாறு வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட அயன் ஆத்தூர் உடையான் ஏரி, பெரிய ஏரி,  விளாங்குடி ஓடை அணைக்கட்டு, பொய்யூர் கல்லார் ஓடை அணைக்கட்டு, கல்லக்குடி பெரிய ஏரி, அருங்கால் ஓடை அணைக்கட்டு, மல்லூர் நைனேரி, மல்லூர் மணிவாசகர் ஓடை அணைக்கட்டு, குருவாலப்பர் கோவில் பொன்னேரி, சித்தமல்லி அணை என மொத்தம் 10 புனரமைப்பு பணிகளுக்கு ரூ.2.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஆற்றுப் பாதுகாப்பு கோட்டத்துக்குட்பட்ட புள்ளம்பாடி பிரதான கால்வாய் தூர்வாருதல் ரூ.25 லட்சத்தில் நடைபெறவுள்ளது. 
குடிமராமத்து திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு: பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப் பணிகளை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெற்குணம் பெரிய ஏரி, நூத்தப்பூர் பெரிய ஏரிகளின் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகள், கரைகள் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மேலும் கூறியது:
பொது பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் ஆகிய வட்டங்களில் உள்ள 14 ஏரிகளுக்கு 2019-20  ஆம் நிதியாண்டின் கீழ் குடிமராமத்து திட்ட தலைப்பின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
அரும்பாவூர் பெரிய ஏரி ரூ. 26 லட்சத்திலும், சின்ன ஏரி ரூ. 22 லட்சத்திலும், கை.களத்தூர் ஏரி ரூ. 26 லட்சத்திலும், வி.களத்தூர் மேலேரி ரூ. 22 லட்சத்திலும், வெண்பாவூர் ஏரி ரூ. 21 லட்சத்திலும், நூத்தப்பூர் ஏரி ரூ. 23 லட்சத்திலும், நெற்குணம் ஏரி ரூ. 20 லட்சத்திலும், கண்ணப்பாடி ஏரி ரூ. 24 லட்சத்திலும், து.களத்தூர் ஏரி ரூ. 30 லட்சத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.குன்னம் வட்டம், கிளியூர் ஏரி ரூ. 27 லட்சத்திலும், கீழப்பெரம்பலூர் ஏரி ரூ. 24 லட்சத்திலும், ஆய்க்குடி ஏரி ரூ. 30 லட்சத்திலும், ஆண்டிக்குரும்பலூர் ஏரி ரூ. 25 லட்சத்திலும், 
கிழுமத்தூர் ஏரி ரூ. 28 லட்சத்திலும் என ரூ. 3.48 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள், முழுமையடைந்த பின்னர், சுமார் 2,700 ஏக்கர் பாசனம் மேம்படுத்தப்படுவதுடன்,  14 ஏரிகளின் மூலமாக 260 மில்லியன் கன அடி நீரானது தேக்கப்பட்டு, நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறையை போக்கிடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர். 
ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சீனிவாசன், மருதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com