பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா

அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் காமராஜர்

அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் காமராஜர் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி விழாவுக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமலைச்செல்வி தலைமை வகித்து, காமராஜரின் வாழ்க்கை குறிப்புகள், அவர் செய்த சாதனைகள், கல்வி அளித்த முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து அப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியரிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பசுமைப் படை சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 
உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தலைமை வகித்தார். எம்.ஆர். கல்லூரி இயக்குநர் ராஜமாணிக்கம் கலந்து கொண்டு காமராஜர் பற்றி பேசினார். தொடர்ந்து அப்பள்ளியில் 15 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய உதவி தலைமை ஆசிரியர் லெனின், பட்டதாரி ஆசிரியை தமிழரசி, உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர். 
தொடர்ந்து தேசிய இளைஞர் திறன் நாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்ட  மாணவிகள் விளம்பர பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகம் வந்தடைந்தனர். 
இதேபோல் அரியலூர், ஜயங்கொண்டம், திருமானூர், தா.பழூர், செந்துறை, பொன்பரப்பி, ஆண்டிமடம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
காமராஜருக்கு காவல் கண்காணிப்பாளர் புகழாரம் :
 அரியலூர் மாவட்டம், லிங்கத்தடிமேடு கிராமத்தில் அமைந்துள்ள வள்ளலார் கல்வி நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு பேசியது:
காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக அரசே கொண்டாடி வருகிறது. 
ஒன்பது ஆண்டுகள் மாநில முதலமைச்சராக இருந்த காமராஜர் மக்களுடைய பிரச்சினைகளை அறிந்து அதற்கு தீர்வு கண்டார்.
காமராஜர் ஆட்சியின் போது, அணை கட்ட 10 சதவிகிதம் கமிஷன் தருவதாக கூறியபோது, அந்த தொகையில் இன்னொரு அணையை கட்டுங்கள் எனக் கூறியவர் காமராஜர் என்றார். தொடர்ந்து மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன. 
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, வள்ளலார் கல்வி அறக்கட்டளை தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com