Enable Javscript for better performance
மரசெக்கு எண்ணெய் விற்பனை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் விவசாயிகளே தயாரிக்கும் மரசெக்கு எண்ணெய் விற்பனையை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் புதன்கிழமை தொடக்கி வைத்தார். 
    நபார்டு வங்கி நிதியுதவியுடன், டால்மியா சிமென்ட் ஆலை நிறுவன மேற்பார்வையில் 400 விவசாயிகளைக் கொண்டு அரியலூர் மாவட்ட காய்கறி விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் அரியலூர் செட்டி ஏரி அருகே இயங்கி வருகிறது.
    இந்த நிறுவனத்தில் வேளாண் மற்றும் வேளாண் பொறியியல், மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மானியத்தில், மாட்டுத்தீவனம் தயாரிக்கும் இயந்திரம், மிளகாய் அறவை இயந்திரம் மற்றும் கடலை உடைப்பு இயந்திரம் ஆகிய வேளாண்மை மதிப்புக் கூட்டிய இயந்திரங்கள் மூலம் மசாலா பொருள்கள்,சிறு தானிய மாவுப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் தயாரித்து அரிமா என்ற பெயரில் விற்கப்படுகிறது.
    இதைத் தொடர்ந்து புதன்கிழமை விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட மரசெக்கு எண்ணெய் வகை விற்பனையை ஆட்சியர் டி.ஜி. வினய் தொடக்கி வைத்து, இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்குகளாக உயரும், இந்த விற்பனையை ஊக்குவிக்கும் வண்ணமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதை விற்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
    நிகழ்ச்சியில் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் எல்.ஜி. நாகநாதன், வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி, இளநிலை பொறியாளர் பெ. பச்சைமுத்து, நபார்டு வங்கி மேலாளர் எல்.எஸ். நவீன்குமார், டால்மியா சிமென்ட் ஆலை பிரதிநிதிகள் ப. பாரதி, ஆர். சுதாகர், அரியலூர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர்கள் ஆர். ராஜகோபால், ஆர். சுதாகரன், அண்ணாமலை மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai