முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
புத்தகக் கண்காட்சி நிறைவு நாளில் குவிந்த வாசகர்கள்
By DIN | Published On : 30th July 2019 09:40 AM | Last Updated : 30th July 2019 09:40 AM | அ+அ அ- |

அரியலூரில் நடைபெற்று வந்த 5 ஆவது புத்தகக் கண்காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது.
தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் 5-ஆவது புத்தகக் கண்காட்சி அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 19 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த இந்தக் கண்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.
இதில், நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், சுமார் 64 அரங்குகளை அமைத்து தங்களது புத்தகங்களை விற்பனை செய்து வந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
குழந்தைகள், பெரியோர்கள் என பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை புரிந்திருந்தனர். நாள்தோறும் இரவு எழுத்தாளர்களின் எழுச்சியுரை, கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. இதன் காரணமாக, கடந்த 10 நாள்களும் புத்தகக் கண்காட்சி நடைபெற்ற அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் திருவிழாக்கோலமாக காட்சியளித்தது. இந்தாண்டு புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த துணிப்பை வகைகளின் பயன்பாடுகள், நெகிழியினால் ஏற்படும் தீமைககள் குறித்து விளக்கப்பட்டது. இது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. இதைக் காண அரியலூர் மாவட்டம் மட்டுமன்றி, பெரம்பலூர், கடலூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் வருகை புரிந்தனர். இந்த புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாசகர்களின் வசதிக்காக கழிப்பிட வசதி, வாகன நிறுத்தம் வசதி, உணவு வசதி என அனைத்து வசதிகளையும் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு செய்திருந்தது.
இறுதி நாளில் குவிந்த வாசகர் கூட்டம்... அரியலூரில் நடைபெற்று வந்த 5-ஆவது புத்தகக் கண்காட்சி இறுதிநாளில் ஏராளமான வாசகர்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இதனால் இறுதிநாளிலும் புத்தகக் கண்காட்சி வளாகம் பரபரப்பாக இருந்தது. மேலும் இறுதி நாளில் பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சீருடைகளுடன் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
கருத்தரங்கு: புத்தகக் கண்காட்சி இறுதி நாளில் நடைபெற்ற கருத்தரங்கில், சொல்லாத சொற்களும், சொல்ல மறந்த கதைகளும் எனும் தலைப்பில் கண்மணி குணேசேகரன் பேசினார்.
புத்தகக் கண்காட்சியில் 2 லட்சம் மரக்கன்றுகள் வழங்கல்: புத்தகக் கண்காட்சியைக் காணவந்த அனைவருக்கும் இலவசமாக வேம்பு, புங்கன், தென்னை, நெல்லி மற்றும் பல வகை மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. 10 நாள்கள் நடைபெற்ற இந்தப் புத்தகக் கண்காட்சியில் 2 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டதாக எம்.ஆர்.சி கல்லூரி தாளாளர் ரகுநாதன் தெரிவித்தார்.
ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாக ஒத்துழைப்புடன் புத்தகக் கண்காட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், எம்.ஆர்.சி கல்லூரி தாளாளருமான இரா.ரகுநாதன், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் சி.இளங்கோ, செயலர் க.ராமசாமி, பொருளாளர் அ.நல்லப்பன், செய்தித் தொடர்பாளர் ரெ.செல்லபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.