தாமரைக்குளம் கிராமத்தில் கரும்பு சாகுபடி பயிற்சி
By DIN | Published On : 18th June 2019 08:59 AM | Last Updated : 18th June 2019 08:59 AM | அ+அ அ- |

அரியலூர் அருகேயுள்ள தாமரைக்குளம் கிராமத்தில் கரும்பு சாகுபடி பயிற்சி திங்கள்கிழமை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில், வேளாண் உதவி அலுவலர் க. பூவலிங்கம் தலைமை வகித்துப் பேசினார். வேளாண் அலுவலர் அ.சவிதா முன்னிலை வகித்தார்.
சோழமாதேவி அறிவியல் ஆராய்ச்சி மைய தொழில்நுட்ப வல்லுநர் அழகுகண்ணன் பங்கேற்றுப் பேசியது: பருவத்துக்கேற்ற கரும்பு ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும். நாற்றாங்கால் அமைத்து, சொட்டு நீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்யப்படுவதால், உரச் செலவு மிச்சமாகிறது. பயிர் பாதுகாக்கப்படுகிறது. மேலும் கரும்பில் ஊடுபயிர்ராக வெங்காயம் மற்றும் உளுந்து சாகுபடி செய்வதால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கிறது என்றார்.
அரியலூர் வட்டார அட்மா தொழில்நுட்ப மேலாளர் ந.பழனிசாமி பங்கேற்று, கரும்பு நடவு செய்த 45 ஆவது நாள் மற்றும் 90 ஆவது நாள் மண் அணைப்பு செய்வதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.பயிற்சியின் முடிவில் விவசாயிகள், ரெங்கராஜ் வயலுக்கு நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் இரா.வாசுகி, செ.சுந்தரமூர்த்தி, இரா.ஸ்ரீதேவி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் வட்டார ஆலோசனை குழு உறுப்பினர் ரெங்கராஜ் நன்றி தெரிவித்தார். இப்பயிற்சியில் தாமரைக்குளம், சீனிவாசபுரம், வெங்கட்ரமணபுரம் கிராமத்தை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.