பொதுமக்கள் குறைகேட்பு: 340 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 18th June 2019 09:00 AM | Last Updated : 18th June 2019 09:00 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 340 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் மு. விஜயலட்சுமி பெற்றுக் கொண்டார்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர், பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 340 கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பின்னர் இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 3 பேருக்கு ரூ.15,750 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில்... பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 244 மனுக்களை பெற்றார். தொடர்ந்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 22 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 52,862 வீதம் ரூ. 11,62,964 மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும்,
ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஒரு குழந்தைக்கு மாதம் ரூ. 2,000 வீதம், 2018-19 ஆம் நிதியாண்டுக்கு முதல்கட்டமாக ரூ. 7.50 லட்சமும்,
பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டதன் மூலம் பெறப்பட்ட பங்குத்தொகையை லப்பைக்குடிகாடு பேரூராட்சிக்கு ரூ. 87,184, பெண்ணகோணம் ஊராட்சிக்கு ரூ. 58,122-க்கான காசோலைகளும் வழங்கினார் ஆட்சியர்.