அரியலூர் அருகேகோயில் வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளி

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள அரசுப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை, ஓடுகள் சேதமடைந்துள்ளதால் கோயில் வளாகத்தில்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள அரசுப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை, ஓடுகள் சேதமடைந்துள்ளதால் கோயில் வளாகத்தில் அரசுப் பள்ளி செயல்பட்டு வரும் அவல நிலை உள்ளது. 
       ஜயங்கொண்டம் அருகேயுள்ள சுந்தரேசபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இவர்களது குழந்தைகளின் கல்வி வசதிக்காக கடந்த 1952 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார். இப்பள்ளி, 1964 ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்த நிலையில், காலப் போக்கில், பள்ளிக் கட்டடம் சரியாகப் பராமரிக்கப்படாததால் பள்ளியின் மேற்கூரை ஓடுகள், கட்டடத்தின் சுவர்கள் சேதமடைந்து போயின. இதைத்தொடர்ந்து, இப்பள்ளி மாணவர்களில் சிலர் அந்தப் பள்ளியில் இருந்து மாற்றலாகி 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுத்தமல்லி அரசுப் பள்ளியில் சேர்ந்துவிட்டனர். மேலும் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது, சுத்தமல்லி அரசுப் பள்ளிக்குச் செல்ல முடியாத மாணவ, மாணவிகள், சுந்தரேசபுரம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் வளாகத்தில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவ, மாணவிகளுக்கு 3 ஆசிரியர்கள் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். 
கடந்தாண்டு சுந்தரேசபுரம் கிராமத்துக்குச் சென்று ஆய்வு செய்த மாவட்டக்கல்வி அலுவலர் புகழேந்தி, இப்பள்ளியின்  கட்டடங்கள் பெயர்ந்து விழும் தருவாயில் உள்ளதால் பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து அப்பள்ளி நிர்வாகி தர்மலிங்கம், பள்ளிக் கட்டடத்தைப் பராமரிக்கும் வசதிகள் இல்லை என்று கூறி, இப்பள்ளியை மாவட்டக் கல்வி அலுவலரிடம் 2018 ஆம் ஆண்டு ஒப்படைத்துச் சென்றுவிட்டார். 
இதற்கிடையே, இப்பள்ளியை மூடுவதற்கான பணிகள் நடைபெற்றபோது கிராம மக்கள் ஒன்று திரண்டு பள்ளியை  மூடக் கூடாது, புதிய கட்டங்களை கட்டித் தந்து பள்ளியைத் தொடர்ந்து நடத்த வேண்டும் எனப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பவ இடத்துக்கு வந்து, பள்ளி தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவித்து சென்றதன்பேரில் கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
ஆனால் ஓராண்டாகியும் இதுவரையில், சேதமடைந்த பள்ளிக் கட்டடம் கட்டப்படவில்லை. இதையடுத்து சுந்தரேசபுரம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் அந்த கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் வளாகத்தில் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் இங்கு, சமையலறை, கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. தற்போது சேதமடைந்த பள்ளிக் கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. இதுகுறித்து அப்பள்ளி மாணவ, மாணவிகள் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமியை சந்தித்து, பள்ளியை மூடக்கூடாது என்றும் சேதமடைந்துள்ள கட்டடங்களை அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என்றும் முறையிட்டனர்.
எனவே, சுந்தரேச புரம் பள்ளியின் சேதமடைந்த கட்டங்களை அகற்றி விட்டு, பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவருடன் புதிய கட்டடங்களை விரைந்து கட்டித் தருவதன் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுந்தரேசபுரம் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com