நீர் மேலாண்மை சிறப்பு கிராம சபை கூட்டம்
By DIN | Published On : 23rd June 2019 04:24 AM | Last Updated : 23rd June 2019 04:24 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் ஊராட்சி மாதிரி பள்ளி வளாகத்தில், நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்து தெரிவித்தது: அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சிறு குளங்கள், குட்டை மற்றும் ஏரிகளை தூர்வாரி மழை நீரைச் சேமிக்க வேண்டும். புதியதாக மரக்கன்றுகளை நட வேண்டும். புதிதாக கட்டப்படும் வீடுகள், சமுதாயக் கூடங்கள் மற்றும் பொதுக் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து, மழை நீரை சேமிக்க வேண்டும்.
ஏற்கெனவே உள்ள கட்டடங்களில் மழை நீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வீடுகளில் பயன்படுத்தப்படும் நீரை வீணாக்காமல் உறிஞ்சு குழிகளில் சேமித்து அதனை மறு சுழற்சி செய்தும் மற்றும் வீடுகளிலும் விவசாய தேவைகளுக்கும் பயன்படுத்துதல் மற்றும் நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர், மழை நீர் சேகரித்தல் பற்றிய விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்பட வேண்டும். கிராம ஊராட்சிகளில் உள்ள பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் நாடகங்கள், நடனம், தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புற பாடல்கள் மூலமாக மழைநீர் சேகரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களிலுள்ள சுவர்களில் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர், அவர் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வுப் பேரணியினை கொடியசைத்து தொடக்கி வைத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிச்சாமி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன் மற்றும் அலுவலர்கள், அஸ்தினாபுரம் மாதிரிப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.