ஏரியை மீட்டுத்தரக்கோரி விவசாயிகள் போராட்டம்
By DIN | Published On : 16th May 2019 08:44 AM | Last Updated : 16th May 2019 08:44 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே தனியார் சிமென்ட் ஆலையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரியை மீட்டுத்தரக்கோரி விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வி.கைகாட்டி அருகேயுள்ள பெரியநாகலூர் கிராமத்தில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட வீராணி ஏரியை அப்பகுதியில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் வைத்துள்ள தனியார் சிமென்ட் ஆலை நிர்வாகம், முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட தேவையற்ற மண்ணை ஏரியில் கொட்டி வைத்துள்ளதாகவும், அதனை உடனடியாக மீட்க வலியுறுத்தியும் விவசாயிகள் புதன்கிழமை ஏரியில் கொட்டப்பட்டுள்ள மண் குன்றின் மீது ஏறி, மண் குன்றிற்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு இதிலிருக்கும் மண்ணை எடுத்துக்கொள்ளவும், ஏரியை தூர்வாரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்துக்கு மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க. சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். போராட்டத்தில், பெரிய நாகலூர் கிராம விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.